புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர், வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்து வருவது, ஏற்கெனவே 2 முறை வெற்றி வாய்ப்பை இழந்த விரக்தியால்தான் என்று கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மேலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணன். திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர்,
சுமார் 25 ஆண்டுகள் திமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்தார். 2 முறை புதுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.
பெரியண்ணன் மறைவுக்குப் பிறகு அவரது மகன் பெரியண்ணன்அரசு மாவட்டச் செயலாளராக உள்ளார். தற்போது புதுக்கோட்டையில் குடும்பத்தோடு வசித்து வரும் இவர்,
புதுக்கோட்டை தொகுதியில் கடந்த 2001-ல் அதிமுக வேட்பாளரிடமும், 2011-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரிடமும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தற்போது 3-வது முறையாக திமுக சார்பில் போட்டியிடும் இவர், கடந்த 2012-ல் அதே தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது மோதிய அதிமுக, தேமுதிக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பெரியண்ணன்அரசு தொழி லாளர்கள், பெண்கள் என வாக்கா ளர்களின் கால்களில் விழுந்து வாக்குசேகரித்து வருகிறார்.
திமுகவில் சுயமரியாதையைப் பற்றி பிரதானமாக பேசப்படும் நிலையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரே வாக்காளர்களின் கால்களில் விழுந்து வாக்குச் சேகரிப்பது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
இது கடந்த 2 முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்ததால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டுமென்பதற்காகவே அவர் இத்தகைய செயலில் ஈடுபடுகிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதுகுறித்து வேட்பாளர் பெரியண்ணன் அரசு கூறியபோது, “கடந்த முறை மிகக் குறைந்த வாக்குகளின் வித்திசாயத்தில்தான் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
இந்த முறை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பெரியவர்களின் கால்களில் விழுந்து அவர்களின் ஆசீர்வாதத்துடன் வாக்கு சேகரிப்பதில் தவறில்லை. இதைத் தொடர்ந்து செய்வேன்” என்றார்.