கிண்டியில் கல்லூரிக்கு சொந்தமான பஸ் தீப்பிடித்து எரிந்தது !

கிண்டியில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அதில் 38 மாணவர்கள் காயம் இல்லாமல் தப்பினார்கள். சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரிக்கு சொந்தமான சொகுசு பஸ் 
ஒன்று நேற்று காலை 38 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்னை மந்தைவெளியில் இருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் வினோத் என்பவர் ஓட்டி வந்தார்.

கிண்டி ஹால்டா சர்தார் பட்டேல் சாலையில் வந்த போது திடீரென சொகுசு பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. 

இதை கண்ட டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். டிரைவர் மற்றும் பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரும் அவசர, அவசரமாக கீழே இறங்கினர்.

சிறிது நேரத்தில் பஸ்சில் புகை வந்த இடத்தில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி, ராஜ்பவன் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனாலும் பஸ்சின் முன்பகுதி, இருக்கைகள் என பஸ்சின் பாதி பகுதி தீயில் எரிந்து நாசமானது. புகை வந்தவுடன் மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.

பின்னர் அந்த பஸ்சில் வந்த 38 மாணவர்களும் மாற்று பஸ்சில் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ்சில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings