மகாராஷ்டிராவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனைகளில் டாக்டர்கள் கை கழுவுவதற்குக் கூட போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் பல ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
புறநோயளிகள் மற்றும் அவசர நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் நிலவும் வறட்சியால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு தண்ணீர் வீணடிக்கப் படுவதை தடுக்கக் கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடும் வறட்சி நிலவும் சமயத்தில் தண்ணீரை வீணடித்து கிரிக்கெட் நடத்துவது அவசியமா என பிசிசிஐக்கு மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், கிரிக்கெட்டை விட மக்களின் நலம் அவசியம் என அறிவுரை வழங்கியது.
எனினும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குடிநீரை,மைதானத்தின் பராமரிப்புக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மைதானத்தின் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், குடிநீரா என்பதை எப்படி சோதிப்பது என்பது புரியாமல், மாநகராட்சி அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக மும்பை, தானே நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஆபரேஷன்களை ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்கு பதில் தொடர்ந்து சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. தண்ணீர் பஞ்சத்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களின் தண்ணீரும் மருத்துவமனைக்கு வந்து சேர இரண்டு நாட்கள் வரை ஆவதாக கூறப்படுகிறது.
தண்ணீர் பஞ்சத்தால் ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்படுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர்கள், பொதுவாக ஆபரேஷன் செய்யும் டாக்டர்களும், அவர்களின் உதவியாளர்களும் ஆபரேஷனுக்கு முன்பும், பின்பும் சுமார் 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் நன்றாக தங்களின் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும். தற்போது, ஒவ்வொரு ஆபரேஷனுக்கு முன்பும் ஒன்று முதல் இரண்டு நிமிடம் வரை கை கழுவுவதற்கே தண்ணீர் உள்ளது.
இது டாக்டர்களுக்கும், நோயாளிக்கும் பாதுகாப்பற்றது. அதுமட்டுமின்றி ஆபரேஷனின் போது பயன்படுத்துவதற்கான தண்ணீரும் போதிய அளவு இல்லை. இதனாலேயே ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றார்.
இங்கு ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்படுவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே மார்ச் மாதம் ஒரு வாரம் வரை ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது மராத்வாடா பகுதியில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால், அடுத்த 15 நாட்களுக்குள் ரயில்கள் மூலம் இப்பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர மகாராஷ்டிர அரசு ஏற்பாடு செய்து வருவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன.