பிரிட்டனில் இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பெண் ஒருவருக்கு, அவசரமாக ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணு தேவைப்படுவதால், அதற்கான தேடுதல் உலகளவில் நடைபெற்று வருகிறது.
அவரது உடலோடு பொருந்திப்போகக் கூடிய குருத்தணு நன்கொடை எவ்வளவு விரைவாகக் கிடைக்குமோ, அவ்வளவு விரைவாக அவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கார்டிஃப் பல்கலைக்கழக மாணவியான 24 வயதான வித்தியா அல்ஃபோன்ஸுக்கு, அவரது மரபணுக்களுடன் ஒத்துப் போகக் கூடிய குருத்தணுக்கள் அவசரமாக தேவைப்படுவதாக கூறும் மருத்துவர்கள் அதற்காக உலகளவில் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு பொருந்தக்கூடிய குருத்தணுவை அளிக்கும் கொடையாளியை பெறுவது, மிகக் கடினமாக உள்ளது எனக் கூறும் மருத்துவர்கள் இப்படியான நன்கொடிகளை வழங்குவதற்கு பதிவு செய்துகொள்ளும் தெற்காசியர்கள் மிகக் குறைவாக இருப்பது முக்கியமான காரணம் எனக் கூறுகின்றனர்.
இவரது உயிரைக் காப்பாற்றக்கூடிய கொடையாளியை தேடிவருவதாக புற்றுநோய் தொடர்பில் செயற்பட்டு வரும் அந்தோனி நோலான் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோயின் ஆரம்பகட்ட அறிகுறியாக, ஜூரம் மற்றும் கால்வலியால் அவதியுற்ற வித்யா, மருத்துவரை அணுகியபோதே இந்நோயின் தாக்கம் தெரியவந்தது. அவசரமாக உயிர்காக்கும் உதவி தேவைப்படும் அவர் கண்மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார்.
நோய்க்கான முதல் அறிகுறிக்கும், நோய் கண்டறியப்பட்டதற்கும் இடையான காலம் ஐந்து நாட்களே என தனக்கு கூறப்பட்டது என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதனால் தனது வாழ்க்கை ஒரு வாரத்தினுள் மாறிப்போய்விட்டது என தெரிவித்த வித்திய அல்ஃபோன்ஸ், அதற்கு முன்னர் தான் ஆரோக்கியமாகவே இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்னும் இரண்டு மாதங்களுக்குள், வித்தியாவுக்கு தேவையான குருத்தணுமாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவரை குணப்படுத்துவதற்கு சிறந்த வழி என அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு குருத்தணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ள அவரது சகோதரனது குருத்தணுக்கள், சகோதரியின் உடல்தன்மையுடன் 50 வீதம் மட்டுமே ஒத்துப் போவதால்,
அவரது உடலோடு பொருந்திப் போகக்கூடிய உறவினர் அல்லாத ஒரு கொடையாளியிடமிருந்து குறித்த செல்களைப் பெறுவதே அவரை காப்பாற்றுவதற்கான சிறந்த வழி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொடையாளிகளாக தம்மிடம் பதிவு செய்துள்ள தெற்காசியர்களிடமிருந்து இவருக்கு பொருத்தமான குருத்தணுக்கள் கிடைக்குமா என்ற ஆராய்ச்சியில் அந்தோனி நொலான் தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
சமுகவலைதளங்கள் ஊடாக இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி பொருத்தமான கொடையாளியை தேடும் பணிகளில் வித்தியா, அவரது குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும் நண்பர்களும் ஈடுபட்டுள்ளனர்.
குருத்தணு (Stem cell) தானம் செய்ய விரும்பும் நபர்கள் தொடர்பு கொள்ள..,
To
sign up to the donor list go to anthonynolan if you’re 16-30.
For more information phone the charity on: 0303 303 0303