தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட விருத்தாச்சலம் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பொது கூட்டத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்குட்பட்ட 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த பிரசாரக் கூட்டம் கடும் வெயிலில் நடைபெற்றதால், கூட்டத்திற்கு வந்த பெண்கள் பலர் வெயிலில் தாங்க முடியாமலும், கூட்ட நெரிசலாலும் மயக்கம் அடைந்தனர்.
இதில், ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குறிஞ்சிப்பாடி ஜெயமணி, வடக்கு வெள்ளூர் லோகநாதன்,
வில்வபெருந்துறை ராமஜெயம், காடம்புலியூர் செந்தாமரை கண்ணன், விருத்தாச்லம் முத்துலக்ஷ்மி, ராமசந்திரன் பேட்டை பூங்காவனம் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், ராதாகிருஷ்ணன் என்பவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், முதல்வர் பொதுக் கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் கருணாகரன் கடும் வெயிலால் மயக்கம் அடைந்தார். அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், கருணாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்ச சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.