இந்தியாவில் தற்போது எல்.எச்.பி. ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ‘டால்கோ’ நிறுவனம் 9 பெட்டிகளை கொண்ட
அதிநவீன டால்கோ ரெயில் ஒன்றை வழங்கி உள்ளது. இந்த ரெயிலை அதிகபட்சமாக 200 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும்.
மேலும் பல்வேறு ஆடம்பர, சொகுசு வசதிகளுடன் கண்ணை கவரும் வகையில் உள்ள அந்த ரெயில் கடந்த மாதம் 27-ந் தேதி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ரெயில் கடந்த வெள்ளிக் கிழமையன்று மும்பை துறைமுகம் வந்திறங்கியது.
இது குறித்து ரெயில்வே வாரிய உறுப்பினர் ஹேமந்த் குமார் கூறியதாவது:-
‘டால்கோ’ ரெயிலின் முதலாவது சோதனை ஓட்டம் பரேலி - மொரதாபாத் இடையே 110 கி.மீ. வேகத்திலும், இரண்டாவதாக பல்வால் - மதுரா இடையே 180 கி.மீ. வேகத்திலும்,
3-வது சோதனை ஓட்டம் டெல்லி - மும்பை இடையே அதிகபட்ச வேகமான 200 கி.மீ. வேகத்திலும் நடத்தப்படும்.
‘டால்கோ’ ரெயில்கள் எல்.எச்.பி. ரெயில்களை காட்டிலும் குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்க கூடியவை ஆகும்.
இதனால் 30 சதவீதம் வரை மின்பயன்பாடு குறையும். மேலும் ஒரு எல்.எச்.பி. ரெயில் பெட்டி தயாரிக்க ரூ. 2.75 கோடி செலவாகும். ஆனால் ‘டால்கோ‘ ரெயில் பெட்டி தயாரிக்க ரூ. 1.7 கோடி மட்டுமே செலவாகும்.
எனவே டால்கோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் எல்.எச்.பி. ரெயில்கள் ஓரங்கட்டப்பட்டு டால்கோ ரெயில்கள் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.