சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கப் போகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. 'தி.மு.கவின் சிம்லா முத்துச் சோழனைவிடவும், சிறுத்தைகள் வலுவான இடத்தைப் பிடிப்பார்கள்' என நம்புகிறார் திருமாவளவன்.
மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா ஆகிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிகப்பட்டு வருகின்றன. த.மா.கா, தே.மு.தி.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்றுதான் விருப்ப மனு வாங்குகிறார் அதன் தலைவர் தொல்.திருமாவளவன். நாளைக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, ஞாயிறு அன்று 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறார் திருமா.
"சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி என்றாலும், அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. வெற்றி வாய்ப்பு குறைவு என்று தெரிந்தே ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியை குறிவைப்பது ஏன்?" என்ற கேள்வியை வி.சி கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.
" தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மக்கள் நலக் கூட்டணியில் தீவிரமாக நடந்தபோது, ஆர்.கே.நகர் தொகுதியில் யார் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்தது. தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் பின்வாங்கியபோதும், 'ஆர்.கே.நகரில் போட்டியிட சிறுத்தைகள் தயார்' என அறிவித்தார் திருமா.
இதில், கூட்டணிக் கட்சியினர் ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். திருமாவின் இந்த முடிவுகளுக்குப் பின்னால் சில காரணங்களும் இருக்கின்றன. முதலமைச்சர் வேட்பாளரை எதிர்க்கிறோம் என்றால்,
அரசியல் அரங்கில் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான மக்கள் நலக் கூட்டணி என்ற கருத்து விதையை திருமாதான் விதைத்தார்.
ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு எதிராக முதன்முறையாக மெகா கூட்டணி ஒன்று களமிறங்குகிறது. அதன் சார்பாக, ஒருவர் முதல்வரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பதே வரலாறுதானே.
ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கான தலைவர் என்ற அடையாளத்தையும் தாண்டி, மெயின் ஸ்ட்ரீம் அரசியலில் கால் பதிக்க நினைக்கிறார் திருமா. அதற்காகத்தான் பொதுத் தொகுதியில் நாங்கள் போட்டியிடவும் முன்வந்தோம்.
கடந்த தேர்தலில், சோழிங்கநல்லூர் தொகுதியை தி.மு.க எங்களுக்கு ஒதுக்கியது. அதுதான் சென்னை புறநகரில் நாங்கள் போட்டியிட்ட முதல் தொகுதி. சென்னைக்குள் இதுவரையில் சிறுத்தைகள் போட்டியிட்டதில்லை. வடபுலத்தில் பத்து தொகுதிகளை ஒதுக்குவார்கள். அதைத்தாண்டி நாங்கள் வெளியே வந்ததில்லை. இப்போதுதான் பரவலாகப் போட்டியிடுகிறோம்.
ஆர்.கே.நகரில் சிறுத்தைகள் சார்பில் யார் போட்டியிடப் போகிறார்? என்பதை மிகுந்த சஸ்பென்சோடு வைத்திருக்கிறார் திருமா. ஜெயலலிதாவை எதிர்க்கப் போகிறவர் தொகுதிக்குள் வலிமையானவராக இருக்க வேண்டும்
எனவும் அவர் நினைக்கிறார். தி.மு.கவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தாலே, மாபெரும் வெற்றி எனக் கணக்குப் போடுகிறார் திருமா" என விவரித்தார் அவர்.
இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் பேசினோம்.
" முதலமைச்சர் வேட்பாளரை எதிர்த்து களமிறங்குவது சிறுத்தைகளுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தரும். எங்கள் வலிமையை ஆர்.கே.நகரில் நிரூபிப்போம். ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் நிறைந்திருக்கக் கூடிய பகுதி அது. வெள்ளத்தால் ஆர்.கே.நகர் பகுதி மக்கள் கொடுமையான துன்பத்தை அனுபவித்தார்கள்.
அவர்களுக்கு ஆதரவாகக்கூட ஆட்சியாளர்கள் குரல் எழுப்பவில்லை. இர்பான் என்ற பள்ளி மாணவர் வெள்ளத்தின் பாதிப்பால் இறந்து போனபோது,
முதல்முறையாக அந்தக் குடும்பத்தை சந்தித்து நிதியுதவி அளித்தார் தோழர்.திருமா. இர்பான் என்ற மாணவரின் மரணத்தை வெளியுலகின் வெளிச்சத்திற்குக் கொண்டு போனது திருமா அவர்கள் மட்டும்தான்.
எங்களுக்கு அனைத்து வகைகளிலும் சாதகமாக இருக்கக் கூடிய தொகுதி ஆர்.கே.நகர். இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அதிரடியை சிறுத்தைகள் நிகழ்த்துவார்கள்" என்றார் உணர்வுபூர்வமாக.
திருமாவிடம் 'மோதிரக்' கையால் குட்டு வாங்கும் அதிர்ஷ்டம் எந்த வேட்பாளருக்குக் கிடைக்கப் போகிறதோ? என ஆர்வமாக இருக்கிறார்கள் வி.சி.கவினர். -( ஆ.விஜயானந்த்)
(இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்) 234-ல் போட்டியிடும் 'அந்த' 41 வேட்பாளர்கள்...! -ஜெயலலிதாவை மிரள வைத்த வீரப்பன்
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 'திடீர்' வன்னியர் பாசத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர் வட மாவட்ட மக்கள். 'தேர்தலில் வீரப்பன் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம் என்ற பயம்தான் காரணம்' எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அ.தி.மு.கவின் அனைத்து வேட்பாளர்களும் இரட்டை சிலை சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் அளவுக்கு களத்தை அமைத்திருக்கிறார் ஜெயலலிதா. எங்கு பார்த்தாலும் இலை மட்டுமே தெரியும் அளவுக்கு அவர் வியூகம் வகுத்தாலும், அதற்குள் ஒளிந்திருக்கும் பெரும்பான்மை சமூகத்தின் மீதான பாசம் அதிர வைக்கிறது.
இது, தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக, 41 வன்னியர் வேட்பாளர்களையும், 33 முக்குலத்தோர் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார் ஜெயலலிதா.
'இதுவரையில், வன்னியர்களுக்கு இவ்வளவு இடங்களை ஜெயலலிதா ஒதுக்கியதில்லை. இதற்கான பின்னணிதான் அதிர்ச்சியளிக்கிறது' என்கின்றனர் வன்னியர் சமூகத்தினர்.
"தமிழ்நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள பிரிவினரில் வன்னியர்களும் அடக்கம். அ.தி.மு.கவும், தி.மு.கவும் வழக்கம்போல, வன்னியர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வார்கள்.
ஆனால், இவ்வளவு தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்தத் தேர்தலில் வன்னியர்களுக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுக்க சில காரணங்கள் இருக்கின்றன.
தி.மு.க.வின் மகளிரணித் தலைவி கனிமொழி, 'ஜெயலலிதா தேவர்களுக்கும் வேளாளக் கவுண்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது போல, வன்னியர்களுக்கு தி.மு.க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்பதை தொடர்ந்து பேசி வருகிறார்.
கட்சிக்குள்ளும் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது தி.மு.க. 'இந்தக் கருத்து தி.மு.கவில் எடுபடும்' என ஜெயலலிதா கருதியிருக்கலாம். வன்னியர்களை வைத்து அரசியல் நடத்தும் பா.ம.கவும் வன்னியர் வேட்பாளர்களை அதிகளவில் களத்தில் நிறுத்துவார்கள்.
'இவர்களை பலவீனப்படுத்த வேண்டும்' என ஜெயலலிதா நினைக்கிறார். இதைவிட நுணுக்கமான காரணம் ஒன்றும் இருக்கிறது. இதை மற்றவர்கள் அறிவதைவிட, ஜெயலலிதா மனசாட்சி மிக நன்றாகவே அறியும். '
தமிழக, கேரள வனப்பகுதிகளை ஆட்சி செய்து வந்த வீரப்பனை சுட்டு வீழ்த்தியது தனது அரசின் சாதனை' எனச் சொல்லிக் கொண்டார் ஜெயலலிதா.
'சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் அவர் வல்லவர்' என ஜெயலலிதாவைக் காண்பித்ததும் இந்தச் செயல்தான். 'அரக்கனை சுட்டு வீழ்த்தினேன்' என்று சொன்னார் ஜெயலலிதா.
வீரப்பனை சுட்டுக் கொன்றது பற்றி எந்த அரசியல் கட்சியும் எதிர்த்து வாய் திறக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் அந்த சாதனையே இன்று அவருக்கு சோதனையாக மாறிவிட்டது.
வடபுலத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியின் சீமான், 'வீரத்தமிழன் வீரப்பன், என் வனக் காவலன் வீரப்பன், அம்மையார் ஜெயலலிதா அவர்களே இன்று சொல்வீர்களா?
வீரப்பனை அரக்கன் என்று' என அவர் செய்யும் பிரசாரம் அ.தி.மு.கவுக்கு கூடுதல் தலைவலியை உருவாக்கிவிட்டது. வீரப்பனை முன்னிறுத்தி தங்களைக் கட்டமைக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.
இதற்காக, 36 வன்னியர் வேட்பாளர்களையும் சீமான் களமிறக்கியிருக்கிறார். வன்னியர் மனதில் இருந்து வீரப்பனின் நினைவுகளை அழித்துவிட முடியாது.
இன்றும் அவரது சமாதிக்குச் சென்று மண் எடுத்து வருபவர்கள் இருக்கிறார்கள். இதை மனதில் வைத்தே 41 வன்னியர் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார் ஜெயலலிதா.
பண்ருட்டியார்,கே.பி.முனுசாமி, பாலக்கோடு அன்பழகன், வன்னியர் இடஒதுக்கீட்டுக்குச் சிறை சென்ற பு.தா.இளங்கோவன், கோவிந்தராஜ், எம்.சி.சம்பத், ராஜேந்திரன், செல்வி ராமஜெயம் என பிரபலமான வன்னியர்களும் இதில் அடக்கம்.
அ.தி.மு.கவின் வன்னியர் வேட்பாளர்களால், முதலியாரையும் அணுக முடியும், ஒடுக்கப்பட்ட மக்களையும் அணுக முடியும். பா.ம.கவால் அது முடியாது என்பதையும் கருத்தில் கொண்டே ஜெயலலிதா இதைச் செய்திருக்கிறார்.
இந்தத் தேர்தலில் வீரப்பனை மையமாக வைத்து அரசியல் எழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ஜெயலலிதா வெகு சாதுர்யமாக காய்களை நகர்த்தியிருக்கிறார்" என்கிறார் வட மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகி ஒருவர்.
'இது உண்மைதானா?' என்ற கேள்வியை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம்.
"நூற்றுக்கு நூறு சதவீத உண்மை. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. வீரப்பன் என்ற பிம்பத்திலிருந்து தனது அரசியலை கட்டமைக்கிறார் சீமான்.
ராமதாஸ் விட்ட இடத்திலிருந்து சீமான் தொடங்குகிறார். வீரப்பனும் பிரபாகரனும்தான் அவர்களின் முக்கிய நோக்கம். இதல் ராமதாஸுக்குத்தான் கூடுதல் டென்ஷன்.
தருமபுரியில் மட்டும்தான் பா.ம.க வெற்றி பெற முடியும். அரசியல் களத்தில் இருபது வருடம் பா.ம.க இருந்தாலும், மற்ற இடங்களில் வெற்றி பெறக் கூடியவர்கள் அ.தி.மு.கவின் வன்னியர்கள்தான். கருணாநிதி 20 இடங்களில் வன்னியர்களை நிறுத்துகிறார்.
பா.ம.க, நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க வன்னியர்களை முன்னிறுத்தும்போது, கருணாநிதி இதைச் செய்யவில்லை. தருமபுரி, கடலூர் பகுதிகளில் மட்டும் வன்னியர்களை களமிறக்கியுள்ளது திமுக.
மற்ற இடங்களில் முஸ்லிம், உடையார், நாயுடு என கூட்டுக் கலவையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார் கருணாநிதி. எது எப்படியிருந்தாலும், வன்னியர்களுக்கு இந்தளவுக்கு முக்கியத்துவத்தை ஜெயலலிதா கொடுப்பார் என ராமதாஸ் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
வீரப்பனை மையமாக வைத்து அரசியல் எழும்போது, அதற்குப் பதில் சொல்ல ஜெயலலிதா விரும்ப மாட்டார். மாறாக, அதிகளவு வன்னியர் வேட்பாளர்களை நிறுத்தும்போது, வீரப்பன் விவகாரம் அடிபட்டுப் போகும் என்பதே அவரது அரசியல் கணக்கு.
அ.தி.மு.கவின் பிரதான முக்கியத்துவம் தேவர் ஜாதிதான். அவர்கள் சார்பாக, 30 முக்குலத்தோர்களை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். இதில், 22 கள்ளர் சாதிகள் அடக்கம். பொதுவாக, கள்ளர்கள் தி.மு.கவுக்கு வாக்களிப்பவர்கள். அவர்களை முழுமையாக தன்பக்கம் ஈர்க்க தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
நாயுடு சமூக வாக்குகள் மக்கள் நலக் கூட்டணிக்கு பிரியக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டே 27 இடங்கள் வரையில் மேற்கு மண்டலத்தில் வேளாளக் கவுண்டர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
அடுத்தபடியாக, நாடார் பெரும்பான்மை தொகுதிகளில் நாடார்களை நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா. ' இது தேவர் கட்சி' என நாடார் சமூகம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காகத்தான். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு தனித் தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
இது அ.தி.மு.க கொடுத்தது அல்ல. அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய சட்டம் கொடுத்தது. சட்டமன்றத் தேர்தலில் அனைத்துவிதமான சாதக, பாதகங்களை ஆராய்ந்து வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார் ஜெயலலிதா " என்றார் விரிவாக.
அரசியல் கணக்குகளுக்குள் வீரப்பன் ஒளிந்து கொண்டிருப்பதை அறியாமல் தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. வடபுலத்து மக்கள் அதை அறிந்ததுபோல் தெரியவில்லை.