சினிமா படங்களில் பல காட்சிகளை பார்த்து இப்படியெல்லாம் நடக்குமா என எண்ணிப்பார்ப்போம். ஆனால் சினிமாவில் கற்பனையாக சொல்லப்படும் பல விடங்கள் நிஜத்திலும் இன்றைய காலகட்டத்தில் நடந்து விடுகின்றன.
படங்களில் திருமணத்தில் தாலி கட்டும் அந்த நொடியில் திருப்பங்கள் ஏற்பட்டு விடும். அவ்வாறானதொரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
திருமணத்தன்று மணமகனை போலீஸார் கைது செய்த நிலையில் அவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று மணமகள் கழுத்தில் தாலி கட்டியுள்ள சம்பவமே அது.
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம், மிட்ட ஒட்டபல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜனார்தன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு திருமலையிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
திருமணம் நடைபெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, திடீரென நெல்லூர் இருந்து சென்ற பொலிஸார் திருமண மண்டபத்துக்கு சென்றுள்ளனர். அங்கு திருமண கோலத்தில் இருந்த மணமகனை கைது செய்வதாகக் கூறி பொலிஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகனின் உறவினர்கள், பொலிஸ் வாகனத்தை முற்றுகையிட்டு, பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொலிஸாரை தாக்கவும் முயற்சி செய்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மணமகன் போலீஸ் வாகனத்திலிருந்து தப்பி திருமண மண்டபத்துக்குள் ஓடியுள்ளார். அங்கிருந்த மணமகள் ஹேமலதாவின் கழுத்தில் அவசர அவசரமாக தாலி கட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினையால், திருமலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் திருமலை பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து போலீஸார் தெரிவித்திருப்பதாவது, “தன்னை காதலித்து வந்த மணமகன் ஜனார்தன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக அவருடைய தாய் மாமன் மகள் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனால் தான் நாங்கள் அவரை கைது செய்ய சென்றோம். திருமணத்தை நிறுத்தி விசாரணை செய்யவே நாங்கள் அங்குச் சென்றோம்.
ஆனால் அவர் எங்களது பிடியிலிருந்து தப்பியோடி மணமகள் ஹேமலதாவின் கழுத்தில் தாலி கட்டி விட்டார். எனினும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம்” என கூறியுள்ளார்.
இது குறித்து மணமகன் ஜனார்தன் தெரிவித்துள்ளதாவது, “எங்கள் குடும்பத்தினர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் எனது உறவினர்கள் பொய் புகார் செய்துள்ளனர். நான் யாரையும் ஏமாற்றவில்லை.
இந்தப் புகார் குறித்து பொலிஸார் முறைப்படி விசாரணை செய்யாமல் என்னை கைது செய்ய வந்தனர். இது எந்த வகையில் நியாயம்? இதை நான் சட்டப்படி எதிர் கொள்வேன்” என கூறியுள்ளார்.