ஜெயலலிதாவுக்கு யோக்கிதை இல்லை ஸ்டாலின் !

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இ.பெரியசாமியை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆத்தூரில் இன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், இந்த தொகுதியின் அதிமுக வேட்பாளராக இருக்கக் கூடிய நத்தம் விஸ்வநாதன் சட்டமன்றத்தில் மதுக்கடைகளை மூடமாட்டோம். பக்கத்து மாநிலங்களில் இருக்கிற வரை இங்கேயும் இருக்கும். மூடமுடியாது என்று அழுத்தம் திருத்தமாக பேசினார். 

அப்போது நான் ஒரு வேண்டுகோளை வைத்தேன். முழு மதுவிலக்கை கொண்டுவர முடியாது என்று சொல்றீங்க. படிப்படியா கொஞ்சம் கொஞ்சமாக குறைச்சிக்கிட்டு வருவீங்களா என்று ஒரு கேள்வி கேட்டேன். 

அப்பவும் முடியாது, முடியவே முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவர்தான் அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன். அதனால்தான் ஆட்சிக்கு வந்தவுடன் முழுமதுவிலக்கை அமல்படுத்துவேன் என கலைஞர் சொன்னார். 

அப்படி சொன்னவுடன் காட்டுத்தீப்போல பரவியது. காந்தியவாதி சசிபெருமாள் கலைஞரை தேடி வந்து நன்றி சொன்னார். எல்லோரும் சொன்னார்கள் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

நீங்கள் சொன்னதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று சொன்னார். மதுவிலக்கை கொண்டுவரக் கோரி போராடிய அவரது உயிர் போய்விட்டது. அதற்கு ஜெயலலிதா ஆட்சிதான் காரணம். 

இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, சட்டமன்றத்திலே ஜெயலலிதா சார்பிலே அந்த அமைச்சர் பேசி, சசிபெருமாள் சாவுக்கு காரணமாக இருந்த இந்த ஜெயலலிதா இப்போது திடீரென்று பொதுக்கூட்டத்தில் நான் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தப்போகிறேன் என சொல்கிறார்.

திமுக தேர்தல் அறிக்கையில் முதல் உறுதிமொழியாக மதுவிலக்கு இருக்கிறது. இதனை பார்த்ததும் மக்களை ஏமாற்றும் விதத்தில் ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக அறிவிக்கிறார்.

சரி அறிவிக்கட்டும். நிறைவேற்றுகிறார்களோ இல்லையோ, ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதுவேற. அதைப்பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. 

இதனை சொல்லிவிட்டு, மதுவிலக்கை அமல்படுத்துகிறோம் என்று சொல்வதற்கு திமுகவுக்கு யோக்கிதை இல்லை என்று கூறுகிறார். யோக்கிதை இல்லை என்று சொல்லுவதற்கு யோக்கிதை ஜெயலலிதாவுக்கு இல்லை. ஆதாரத்துடன் சொல்கிறேன். 

வாய்க்கு வந்தபடி ஜெயலலிதாவைப்போல பேசிவிட்டு போக நான் விரும்பவில்லை. ஏனென்றால் நான் கலைஞருடைய மகன். எதையும் ஆதாரத்துடன்தான் பேசுவேன்.

1974ம் ஆண்டு மதுவிலக்கை முதன் முதலில் அமல்படுத்தியவர்தான் கலைஞர். நான் புள்ளி விவரத்தோடு ஆண்டு வாரியாக சொல்கிறேன். இதில் தவறு இருந்தால் அவர்கள் மறுத்து பேசட்டும். நான் மன்னிப்புக் கேட்கிறேன். இல்லையென்றால் வழக்கு போடட்டும், 

நீதிமன்றத்திற்கு ஆதாரத்தோடு வர தயாராக இருக்கிறேன். 1974ம் ஆண்டு மதுவிலக்கை மீண்டும் முதன் முதலாக அமல்படுத்தியவர் கலைஞர். 2007ல் 1300க்கும் மேற்பட்ட மதுக்கடைகளையும் பார்களையும் மூடியவர்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர். 

அதே வருடத்தில் இனி புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர். ஒரு மணி நேரம் மதுக்கடைகளில் விற்பனையை குறைத்து உத்தரவுப்போட்டவர் கலைஞர்.

அனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி, சந்துக்கு சந்து, மூளை முடுக்கெல்லாம் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. திறந்தவர் ஜெயலலிதா. இவர் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக அறிவிக்கிறார். 

மதுவிலக்கை அமல்படுத்துகிறோம் என்று சொல்வதற்கு திமுகவுக்கு யோக்கிதை இல்லை என்று கூறுகிறார். திமுகவுக்கு யோக்கிதை இல்லை என்று சொல்லுவதற்கு யோக்கிதை ஜெயலலிதாவுக்கு இல்லை.

அரசாங்கமே பீர் பாட்டில், பிராந்தி பாட்டில் விற்க உத்தரவிட்டது ஜெயலலிதா. அந்த மது பாட்டில்களை தயாரித்து அரசாங்கத்திற்கு விற்க மிடாஸ் ஆலையை உருவாக்கியது யார். 

மிடாஸ் ஆலையின் பங்குதாரர் யார் தெரியுமா. மிடாஸ் ஆலையின் உரிமையாளர் யார் தெரியுமா. நான் சொல்லவில்லை. நீங்கள் (மக்களை பார்த்து) சொல்லுங்கள். 
அந்த மிடாஸ் நிறுவனத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் அரசு பணத்தை வாரி இறைத்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, திமுகவுக்கு யோக்கிதை இல்லை என்று சொல்லக்கூடிய யோக்கிதை உறுதியாக சொல்கிறேன் ஜெயலலிதாவுக்கு இல்லை.

ஆகவே திமுக ஆட்சிக்கு வந்ததும், கலைஞரின் முதல் கையெழுத்து மதுவிலக்கு குறித்த சட்டம் என்பதை பெருமையோடு தெரிவிக்கிறேன். இவ்வாறு பேசினார்.
Tags:
Privacy and cookie settings