நம்பிக்கையை விதைக்கும் சீமானின் பிரசாரம் !

சமூக வலைதளங்களே சரணாகதி என 'வலைவாசியாக' வாழ்ந்துவரும் தங்களுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் பிரசாரம் நம்பிக்கையை விதைக்கும் வகையில் இருக்கிறது என்கின்றனர் 
முதல் தலைமுறை வாக்காளர்கள். சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியல் சக்தி நாங்களே என தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா; பாஜக ஆகியவை களத்தில் நிற்கின்றன. 

அதே நேரத்தில் ஒட்டுமொத்த தற்போதைய அரசியல் நடைமுறைக்கே 'தத்துவார்த்த' மாற்று நாங்களே என்ற முழக்கத்துடன் சீமானின் நாம் தமிழர் கட்சி முழங்கி வருகிறது.

234 தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் இறங்கியுள்ளது. கடலூர் சட்டசபை தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார். 

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் இது அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்றபோதும் ஒரு அனுபவமிக்க, தத்துவத்தின் அடிப்படையிலான இடதுசாரி கட்சி, தொண்டர்களைப் போல முழுமையான ஒழுங்குடன் தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.

சீமான் முன்வைக்கும் தத்துவார்த்த மாற்று, தலைகீழான நிர்வாக மாற்றத்தை உள்ளடக்கிய 'நாம் தமிழர் அரசு' 

என்பது மத்திய அரசிடம் அதிக அதிகாரங்கள் குவிந்திருக்கும் இந்திய அரசியல் அமைப்பில் எத்தகைய சாத்தியம்? ஆட்சி அமைக்கும் வாக்குகளை சீமான் கட்சி முதலில் பெறுமா? என்ற எதிர்கேள்விகள் நிறையவே முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் சமூக வலைதளங்களே வாழ்க்கை என வாழ்ந்து வருகிற முதல் தலைமுறை வாக்காளர்களோ சீமான் முன்வைக்கும் அத்தனை 'மாற்றுகளை'யும் சிலாகிக்கின்றனர். அவற்றை முழுமையாக ஆதரிக்கின்றனர்.

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக சீமானுக்கு வாக்களித்து பார்ப்போமே.... ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து தான் முயற்சிப்போமே 

என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு இந்த முதல் தலைமுறை வாக்காளர்களிடம் இருப்பதை உணரவும் முடிகிறது. கட்சி கட்டமைப்பில் திமுக, அதிமுக அளவுக்கு நாம் தமிழர் கட்சி வலுவானதாக இல்லைதான்.. 

ஆனால் சமூக ஊடகங்களில் இந்த இரு கட்சிகளுக்கும் கடும் போட்டியாளராக நாம் தமிழர் கட்சிதான் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

சீமானின் பிரசாரங்களை சமூகவலைதளங்களில் உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதிலும் தீவிரமாகவே இருக்கின்றனர்... சமூக வலைதளவாசிகளான முதல் தலைமுறை வாக்காளர்களைப் பொறுத்தவரை சீமான் ஒரு நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறார்... இந்த நம்பிக்கை வாக்குகளாக மாறுமா? 

இந்த முதல் தலைமுறை வாக்காளர்களின் மவுனம், டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலை அரியணையில் ஏற்றியதைப் போல ஒரு மாயவித்தையை தமிழகத்தில் நிகழ்த்துமா? என்பது மே 16-ல் தெரிந்துவிடும். இந்த கருத்துக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன ?
Tags:
Privacy and cookie settings