கார்ட்டூன் படத்தைப் பார்த்து அதில் வருபவர்களைப் போல் தானும் பறக்க நினைத்து, 6 வயது சிறுமி ஒருவர் 43வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் ஜப்பானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது ஒசாகா நகர். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 43வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார் 6 வயது சிறுமி ஒருவர்.
சம்பவத்தன்று அந்த சிறுமி குழந்தைகளுக்கான கார்ட்டூன் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த கார்ட்டூனில் வருபவர்கள் பறக்கும் சக்தி படைத்தவர்களாம். கார்ட்டூனைப் பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுமிக்கு, திடீரென தானும் அதுபோல் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்துள்ளது.
இதனால், தனது வீட்டின் பால்கனியில் ஏறிய அச்சிறுமி, கார்ட்டூனில் பறப்பது போல், பறக்க நினைத்து கீழே குதித்துள்ளார். சிறுமி பால்கனி விளிம்பில் நிற்பதை அவரது குடும்பத்தார் பார்த்துள்ளனர்.
அவர்கள் விரைந்து சென்று காப்பாற்றும் முன் அச்சிறுமி கீழே குதித்ததாகத் தெரிகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அச்சிறுமியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
கார்ட்டூன்களில் காட்டப்படும் அசாத்திய திறமைசாலிகளைப் பார்த்து குழந்தைகளும் இது போன்ற விபரீத முயற்சிகளில் இறங்குவது ஆபத்தானது.
குடும்பத்தில் உள்ளவர்கள் தான், கார்ட்டூன் கேரக்டர்கள் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
இதுவே எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கும் என்பது மனநல மருத்துவர்களின் கருத்து.