ஜெயலலிதா அமைச்சரவையில் இரண்டு ஜாதிக்கு முக்கியத்துவம் !

அதிமுக அரசில் ஜாதி வாரியாக அமைச்சரவையில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற ஆதங்கம் பிற சமூகத்தினரிடையே எழுந்துள்ளது. 
முக்குலத்தோர் மற்றும் கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆகிய ஜாதியினருக்கு மட்டுமே கட்சியிலும், ஆட்சியிலும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சலசலப்பு உண்டாகியுள்ளது. 

அதிமுக அரசு அமைந்ததும், ஜெயலலிதா தலைமையில் அமைந்த அமைச்சரவையில், வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த, எட்டு பேருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 

கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அதிமுக அதிகப்படியான வெற்றியை ஈட்டியது. இதற்கான பரிசாக அமைச்சரவை உருவாக்கம் பற்றி வியாக்கியானம் சொல்லப்பட்டது.

கவுண்டர்களுக்கு அடுத்தபடியாக, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த, ஆறு பேருக்கும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கும், அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவரும், அமைச்சரவையில் இருந்தனர். ஆனால், அவ்வப்போது அமைச்சரவை மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தது.

கேபினட் மாற்றப்படும்போது, முக்குலத்தோர் சமூகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. 

இப்போதுள்ள ஜெ. அமைச்சரவையில், முக்குலத்தோர் ஏழு பேர், வெள்ளாள கவுண்டர் ஆறு பேர் உள்ளனர். வன்னியர் சமூகத்தவர் எண்ணிக்கை மூன்றாகவும், நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் எண்ணிக்கை மிக குறைந்து ஒன்றாகவும் ஆகிவிட்டது.

தற்போது அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக பலம் பொருந்தியதாக உள்ளது அமைச்சர்கள் வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி மற்றும் வேலுமணி ஆகிய நால்வர் அணி. 

இதில் வைத்திலிங்கம் மட்டும் முக்குலத்தோர். பிற மூவரும் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தினர். இவர்களில் இருவர் சம்பந்தி உறவு முறையாம். 

ஏற்கனவே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அடங்கிய ஐவரணியிலும், இதேபோன்ற குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் பிரதிநிதித்துவம் தரப்பட்டது.

ஜெ. முதல்வரானதும் அமைக்கப்பட்ட முதலாவது ஐவரணியில், ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், கே.பி.முனுசாமி ஆகிய அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். 

ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் முக்குலத்தோர். கேபி முனுசாமி, வன்னியர். பழனியப்பன், கொங்கு வெள்ளாள கவுண்டர்.

இதன்பிறகு இந்த ஐவரணியில் இருந்து வன்னியரான கே.பிமுனுசாமி வெளியேற்றப்பட்டு, அதற்கு பதிலாக கொங்கு வெள்ளாள கவுண்டரான எடப்பாடி பழனிச்சாமி சேர்க்கப்பட்டார். 

இதனால் 2வது ஐவரணியில் வன்னியருக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. முக்குலத்தோர் மற்றும் கொங்கு வெள்ளாள கவுண்டர்களை மட்டும் கொண்டதாக 2-வது ஐவரணி இருந்தது.

இப்படி முக்குலத்தோர் மற்றும் கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுவது கட்சியில் உள்ள மற்ற சமூகத்தினரிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதோடு, 


பிற சமூக மக்களிடமும் கோபத்தை உருவாக்கியுள்ளது. தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு எதிராக பிற ஜாதியினரின் கோபம் திரும்பலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஏற்கனவே அதுபோன்ற ஒரு கொந்தளிப்பு முத்தரையர் சமூகத்தில் இருந்து வெளியாகிவிட்டது. ஊருக்கு ஊர் அந்த சமூகத்தினர் போஸ்டர் அடித்து அதிமுக தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings