இதுவரை பறிமுதல் செய்த பணம் கோடிகளில் !

பண பட்டுவாடாவை தடுக்க சென்னைக்கு உட்பட்ட தொகுதிகளில் மேலும் 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் சந்திரமோகன் தெரிவித்தார்.
பண பட்டுவாடாவை தடுக்க...

சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

பண பட்டுவாடாவை தடுக்க ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் என சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 48 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சியினரின் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. 

அதே சமயத்தில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதை தடுப்பதற்கு தேர்தல் ஆணையமும் முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி தொகுதி வாரியாக கூடுதல் குழுக்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

கலந்தாய்வு கூட்டம்

சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் பி.சந்திரமோகன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. 

கூட்டத்தில், தேர்தல் செலவின பார்வையாளர்கள், அரசு ஊழியர்கள், பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலையான கண்காணிப்பு குழுவினர் பங்கேற்றனர்.

வாகனங்கள், உடமைகளை சோதனை செய்வது எப்படி?, என்னென்ன ஆவணங்கள் இருந்தால் பிடிபடும் பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்?, சோதனையின்போது என்னென்ன வழிமுறைகளை பின்பற்றவேண்டும்? என்பது குறித்து கண்காணிப்பு குழுவினருக்கு விளக்கி கூறப்பட்டது.

மேலும் 32 கண்காணிப்பு குழுக்கள்

முன்னதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பி.சந்திரமோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையில் ஏற்கனவே ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 48 கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.

ஆகவே அவர்களை கண்காணிப்பதற்கு நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு என தொகுதிக்கு 2 குழுக்கள் வீதம் 16 தொகுதிகளுக்கும் மேலும் 32 குழுக்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

ரூ.7.78 கோடி பறிமுதல்

இந்த குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிமுறைப்படி எவ்வாறு சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்?, பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை எவ்வாறு பறிமுதல் செய்ய வேண்டும்? என்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

சென்னையில் மொத்தம் 39 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பறக்கும் படையினரால் சென்னை மாவட்டத்தில் மட்டும் நேற்று காலை வரையிலும் ரூ.7.78 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Privacy and cookie settings