சென்னை நகரின் பல்வேறு இடங்களில் தற்போது மினி சரக்கு வேன்கள் மூலம் ஆபத்தான முறையில் ஆட்களை ஏற்றி செல்வது அதிகரித்துவிட்டது. மேலும், அந்த சிறிய லாரிக்குள் மெகா சைஸ் உருவங்களையும் அதிகளவு சரக்குகளையும் ஏற்றி சென்று வருகின்றனர்.
ஆனால், அந்தந்த சாலைகளில் பாதுகாப்பு பணியில் உள்ள போக்குவரத்து போலீசார் இந்த வாகனங்களை கண்டுகொள்ளாமல் சம்திங் வாங்கிக்கொண்டு அனுமதித்து வருகின்றனர் என்று ஏராளமான வாகன ஓட்டிகள் புகார் கூறி வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து அதிகாலை முதல் ஏராளமான காய்கறி மற்றும் பழங்களை மினி சரக்கு வேன்கள் எடுத்து செல்கின்றன. அந்த காய்கறி மூட்டைகளின்மேல் பெண்கள் உட்பட ஏராளமான ஆட்கள் ஆபத்தான முறையில் அமர்ந்து செல்கின்றனர்.
அந்த சரக்கு வேனுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக சரக்குகள் ஏற்றப்படுகின்றன. அத்துடன் அதிக ஆட்களையும் ஏற்றிச் செல்வதால், மேம்பாலங்களில்
அந்த மினி சரக்கு வேன் ஏறும்போது தள்ளாடியபடியே சென்று வருகின்றன. இதனால் ஏதேனும் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டு அந்த வேன் கவிழ்ந்தால்கூட, அதிக உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
இதேபோல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெளியூர்களிலிருந்து வரும் மினி சரக்கு லாரிகளில் மெகா சைஸ் பொம்மைகள் முதல் அதிகளவு ஆட்களையும் சென்னை நகரில் கூலிவேலைக்கு அழைத்து வருகின்றனர்.
அந்த லாரிகளில் கட்டிட பொருட்கள், இரும்பு கம்பிகள் மற்றும் குழாய்களுக்கு மேல் ஏழை மக்கள் அமர்ந்து வருகின்றனர். இக்காட்சிகளை நாள்தோறும் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் நாம் அதிர்ச்சியுடன் பார்த்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே பாரிமுனையில் ஒரு மினி சரக்கு வேனில் ஏற்றப்பட்டு இருக்கும் அலுமினிய ஏணிகள் உள்ளிட்ட பல்வேறு இரும்பு பொருட்கள் மீது நான்கைந்து பேர் சர்வசாதாரணமாக அமர்ந்து செல்வதை நாம் அடிக்கடி பார்க்கலாம்.
இதேபோல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் பகுதியில் இருந்து பிரமாண்ட கழுகு சிலையை ஏற்றிக்கொண்டு ஒரு மினி சரக்கு லாரி வேகமாக வந்தது.
அந்த லாரியை கோயம்பேடு மேம்பாலம் அருகே போக்குவரத்து போலீசார் மடக்கி நிறுத்தினர். அந்த லாரி டிரைவரும் வண்டியில் இருந்தபடியே போலீசாரிடம் ஏதோ கூறிவிட்டு,
அவர்களது கையில் நூறு ரூபாயை அழுத்திவிட்டு, அங்கிருந்து ஹாயாக கிளம்பி சென்றார். ஆனால், அந்த லாரியை ஒட்டியபடி சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் தான் மிரட்சியுடன் பார்த்தபடி பின் தொடர்ந்து சென்றனர்
என்று சென்னை மாநகர ேபருந்து டிரைவர்கள் கூறினர். ‘சென்னை நகரின் பல்வேறு இடங்களுக்கு நான் வேலை நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் சென்று வருவேன்.
கடந்த வாரம் ராயபுரம், எஸ்என்.செட்டி தெருவில் நான் வாகனத்தில் சென்றபோது, எனக்கு முன்னால் ஒரு டிரைசைக்கிளில் மிக நீண்ட இரும்புக் குழாயை கயிற்றினால் இறுக்கமாக கட்டாமல் கொண்டு சென்றனர்.
அந்த இரும்பு குழாயும் வண்டிக்குள் இங்குமங்கும் உருண்டபடியே இருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால், அதைப் பற்றி டிரைசைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றவரும் அங்கிருந்த போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு இருசக்கர வாகனங்கள் நீண்ட தூரம் ஊர்ந்தபடி செல்லும் அவலநிலை ஏற்பட்டது’ என்று ஒரு மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாபமாக கூறுகிறார். இதுகுறித்து ஒருசில போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, ‘கோயம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாநகர்,
ஓஎம்ஆர் சாலை, அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மினி சரக்கு வேன்களில் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். அவர்களை நிறுத்தி விசாரித்தால், ஆளுங்கட்சி கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து செல்கிறோம் என்று கூலாக கூறுகின்றனர்.
இதேபோல் மினி சரக்கு லாரிகளில் மிக பிரமாண்ட சிலைகளையும் எடுத்து செல்கின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டால், அவர்கள் யாரிடமோ செல்போனில் பேசுகின்றனர்.
அடுத்த சில நிமிடங்களில் எங்கள் போனில் உயர் போலீஸ் அதிகாரி கண்டபடி அசிங்கமாக திட்டுகிறார். இதனால் நாங்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.
இத்தகைய மினி சரக்கு வேன்களில் ஆளுங்கட்சி கொடிகள் மற்றும் ஆட்களுடன் வரும் நிர்வாகிகள் எங்களை தரக்குறைவாக திட்டுகின்றனர். எங்கள் உயர் அதிகாரிகளை நம்பி,
எங்களால் அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேச முடியாத அவலநிலை உள்ளது. இதனால் நாங்கள் அவர்களை கண்டுகொள்ளாமல் சாலையோரமாக ஒதுங்கிவிடுகிறோம்’ என்று போலீசாரும் புலம்பி வருகின்றனர்.
இத்தகைய மினி சரக்கு வேன்கள் மற்றும் லாரிகளில் அதன் கொள்ளளவைவிட அதிகமான பொருட்களை ஏற்றி செல்லக்கூடாது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய வாகனங்களை போக்குவரத்து போலீசார் பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவித்து வருகிறது.
எனினும், காவல்துறை மற்றும் அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுப்பதுமில்லை என சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.