ரஜினியை போல் நான் பின் வாங்க மாட்டேன் விஜயகாந்த் !

ரஜினிகாந்த் பின்வாங்கியதைப் போல், நான் ஒருபோதும் பின் வாங்க மாட்டேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக பேசினார். திருத்தணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை 
ஆதரித்து நேற்று மாலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தற்போது வெளுத்தது எல்லாம் பால் என்ற நிலைமை உள்ளது. 

பாலில் நிறைய தண்ணீர் கலந்தாலும் வெள்ளையாகத்தான் தெரியும். அதை மக்கள் தற்போது புரிந்து கொண்டு விட்டார்கள். தி.மு.க.வினர் ‘முடியட்டும், விடியட்டும்’ என சொல்கிறார்கள். 

இதை கேட்பவர்கள் எல்லாம் என்ன அபசகுணமாக உள்ளது என்று கேட்கிறார்கள். அது தான் நடக்கப்போகிறது. தமிழகத்தில் நல்லாட்சி மலர, ஊழலற்ற ஆட்சி மலர தே.மு.தி.க. மக்கள் நல கூட்டணி,¢ த.மா.கா. வேட்பாளர்களை ஆதரியுங்கள். 

ஜெயலலிதா தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் தங்கள் பதவிகளை காப்பாற்றிக்கொள்ள காசு கொடுத்து ஆட்களை கொண்டுவந்து சேர்க்கிறார்கள். ஆனால் இங்கே வந்திருக்கும் பொது மக்கள் காசு வாங்கிக் கொண்டு வந்தவர்கள் அல்ல. 

தே.மு.தி.க. கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்து வந்தவர்கள். நாங்கள் 6 கட்சிகளுடன் நல்ல கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறோம். வாக்காளர்கள் அனைவரும் எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து வில்லிவாக்கத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் தி.மு.க. 5 தடவையும், அ.தி.மு.க. 3 தடவையும் மாறி, மாறி ஆட்சி செய்து குட்டி சுவராக்கி விட்டார்கள். மழை வந்தபோது நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம். 

நீங்கள் திரும்ப, திரும்ப அவர்களுக்கு வாக்களித்தால் அதே கதி தான் ஏற்படும். சட்டசபைக்கு நான் வரக்கூடாது என்று வெறுப்பேற்றினார்கள். சட்டசபைக்கு வராதவர் எல்லாம் எதிர்க்கட்சி தலைவரா? என்கிறார்கள். 

நான் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ‘பியூஸ் போன பல்பு’ போலத்தான் இருக்கிறேன். ஏமாற்ற பிறந்தவர்கள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். நாமெல்லாம் ஏமாறுவதற்காக பிறந்தவர்கள்.
ரஜினி நடித்த திரைப்படம் ஒன்றில் சில காட்சிகளை வெட்டி எடுக்கசொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் பணிந்து பின் வாங்கினார். ஆனால், அதேபோன்று, பாமக தலைவர் ராமதாசால் தனக்கு மிரட்டல் வந்தபோது தான் பின்வாங்கவில்லை. 

எந்த ஒரு விஷயத்திலும் தான் பின்வாங்கியதில்லை. நல்ல உள்ளம் படைத்தவர் ரஜினிகாந்த். அவரை நாம கூட்டிகிட்டு வரலாம், ஆனால், தேவையில்லாத சண்டை எதுக்கு என்று அவர் நினைக்கிறார்" என்று பேசி முடித்தார்.
Tags:
Privacy and cookie settings