ஒரு சீட் கூட தராமல் ஏமாற்றி விட்டது திமுக.. கார்த்திக் !

திமுக கூட்டணியில் எங்களுக்கு ஒரு சீட் கூட தராமல் ஏமாற்றி விட்டனர். இனியும் காத்திருக்க முடியாது. நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம் என்று கூறியுள்ளார் நடிகரும், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக்.  
நடிகர் கார்த்திக் தேர்தலுக்குத் தேர்தல் எந்தக் கூட்டணியில் சேருவது என்று தெரியாமல் அலை பாய்வதும், பின்னர் அப்படியே அமுங்கிப் போவதும் வழக்கமாக உள்ளது. 

இந்தத் தேர்தலிலும் அவர் திமுக கூட்டணியில் சேரப் போவதாக தகவல்கள் வந்தன. அவர் அறிவாலயம் வரவுள்ளதாகவும், ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

ஆனால் அவர் வரவில்லை. அவருக்காக காத்திருந்து கடுபபாகி கிளம்பிப் போனார் ஸ்டாலின். இந்த நிலையில் அவரை அதிமுக தரப்பி்ல் வழி மறித்து அழைத்துப் போய் விட்டதாக ஒரு செய்தி வெளியானது. மேலும் நாளை அவர் முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. 

இந்தப் பின்னணியில் கார்த்திக் அளித்துள்ள ஒரு பேட்டியில், இரண்டு மாதமாக காக்க வைத்து வேறு எங்கும் போகவிடாமல் தி.மு.க. எங்களை ஏமாற்றிவிட்டது. ஒரு தொகுதியாவது கொடுத்து இருக்கலாம். ஆனால் அதையும் பிறகு யோசிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். 

அதிமுகவில், முதலில் ஆதரவு கடிதம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அங்கு ஆதரவு கடிதம் கொடுத்த கட்சிகளை ஓரங்கட்டி உள்ளனர். எனவே அது போன்ற நிலைமை வரக்கூடாது என்பதால் ஆதரவு கடிதம் கொடுக்கவில்லை. இனி யாருக்காகவும் நாங்கள் காத்திருக்க முடியாது. 

எல்லோரையும் ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். இது குறித்து இளைஞர் அமைப்பினர், கட்சியின் பிரதிநிதிகளுடன் கூடி நாளை ஆலோசனை நடத்தி தெரிவிக்கவுள்ளேன் என்றார் கார்த்திக். தற்போதும் கூட கார்த்திக்குக்கு நிறைய கதவுகள் திறந்தே உள்ளன. 

விஜயகாந்தைச் சந்தித்து தேமுதிக கூட்டணியில் இணையலாம். பாஜக கூட்டணியிலும் நிறைய இடம் உள்ளது. அங்கு போகலாம். ஜி.கே.வாசன் தனியாகத்தான் இருக்கிறார். அவரையும் பார்த்துப் பேசி விட்டு வரலாம். பாமகவிடம் கூட முயற்சித்துப் பார்க்கலாம்.
Tags:
Privacy and cookie settings