தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய வேட்பு மனுதாக்கல் சுமார் ஒரு வாரம் நடைபெற்று நேற்று மதியத்தோடு முடிவடைந்தது.
இதில் சுமார் 6,700க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. பொதுப் பார்வையாளர்கள் 122 பேர் முன்னிலையில், வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படுகிறது.
நிராகரிக்கப்படும் வேட்பு மனுக்கள் குறித்த தகவல்கள் இன்று மாலை வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஏற்கப்பட்ட முக்கிய பிரமுகர்களின் வேட்புமனு குறித்த தகவல் ஒவ்வொன்றாக வெளியாகிக்கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா, திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை,
தி.நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல உளுந்தூர்பேட்டையில் வேட்புமனு தாக்கல் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும், அன்புமணி ராமதாஸ், கடலூர் தொகுதியில் போட்டியிடும் 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரது வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.