முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா 25 நிமிடத்தில் முடிவடைந்தது. 6வது முறையாக இன்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக குழு, பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல முக்கிய முகங்கள் கலந்து கொண்டனர்.
உயர்நீதிமன்ர தலைமை நீதிபதி, நீதிபதிகள், மதுரை ஆதீனம், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் விழாவில் பங்கேற்றனர்.
அதிமுகவின் பிரச்சாரப் பீரங்கிகளாக செயல்பட்ட நடிகர்கள் குண்டு கல்யாணம், குண்டு ஆர்த்தி, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழா 12 மணிக்குத் தொடங்கி 12.25 மணிக்கு முடிவடைந்தது.
ஜெயலலிதா என்னும் நான் என்று ஆளுநர் ரோசய்யா தமிழில் எடுத்துக் கொடுக்க, அதை ஜெயலலிதா திரும்பச் சொல்லி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டார்.
ஜெயலலிதா உள்பட அனைத்து அமைச்சர்களும் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பதவியேற்பு முடிந்ததும் ஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதாவும், அமைச்சர்களும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.