பாகிஸ்தானின் கிழக்கு மாகாணமான பஞ்சாபில் ஒரு குக்கிராமத்தில் தமது குடும்பத்துப் பெண்கள் மூவரை கௌரவக் கொலை செய்தார்கள் என்ற
சந்தேகத்தின் பேரில் 3 ஆண்கள் பாகிஸ்தானிய பொலிஸாரால் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப் பட்டுள்ளனர்.
கடந்த மே 11 ஆம் திகதி (புதன்கிழமை), ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது.
இந்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சம்பவம் கௌரவக் கொலை யென்பதை கண்டறிந்தனர்.
இதே வேளை, சுட்டுக் கொல்லப்பட்ட பெண்களில் பர்ஸானா என்ற 18 வயதான பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக,
குறித்த பெண் தனது தாய் வீட்டிற்கு சில நாட்கள் முன்பு வந்துள்ளதாகவும் அந்த முரண்பாட்டின் நிமதித்தமே இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் அறிக்கை யிட்டுள்ளன.
இதே வேளை, இறந்த பர்ஸானாவின் தந்தை சம்பவம் தொடர்பில் குறிப்பிடுகையில், என் மகள் தன் கணவனுடன் சண்டை பிடித்து விட்டு என் வீட்டிற்கு வந்து விட்டாள்.
அவளை அழைத்துச் செல்ல என் மருமகன் வந்திருந்தார். ஆனால், என் மகள் என்னிடம் கூறினாள், ‘அப்பா என்னை அவரோடு அனுப்பாதீர்கள்.
அவர் என்னை மிகவும் மோசமான முறையில் நடத்துகிறார், அவர் என்னை தாக்குகிறார் என்றாள். அதனால் என் மருமகனை நான் பொறுமையாக இருக்குமாறு கூறினேன்.
தீர்மானம் ஏதேனும் எடுப்பதற்கு முதல் காலை உணவை உட்கொள்ளுமாறு வேண்டினேன். ஆனால் அவர் கேட்கவில்லை,
நான் அவரோடு சண்டையிட்டேன், எனக்கு அவர் மீது மிகவும் கோபம் ஏற்பட்டது, அவர் மிகக் கோபத்தோடு வீட்டைவிட்டு திடீர் என சென்று விட்டார் என்று தெரிவித்துள்ளார்’.
இதனைத் தொடர்ந்து, கோபமாக சென்ற குறித்த நபர் தன்னுடைய சகோரத முறையான இரு ஆண்களிடம் சென்று தன் மனைவி ஒழுக்கத்திற்கு முரணான வகையில் நடந்து கொள்வதாகவும்,
அந்த பெண் உட்பட அவர் குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதனை யடுத்தே குறித்த கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்
பொலிஸார் 3 ஆண்களை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.