சேலம் அருகே போலீஸ் ஜீப் மோதி பெண் பலி !

சேலம் பனைமரத்துப்பட்டி மல்லூரில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் மோதி பெண் ஒருவர் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குக் காரணமான இன்ஸ்பெக்டரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ராஜாராம் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி குணவதி குடும்பத்துடன் ராசிபுரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

சேலம் - நாமக்கல் சாலை மல்லூர் அருகே வந்த அவர்கள் இருசக்கர வாகனம் மீது பின்புறம் வந்த போலீஸ் ஜீப் வேகமாக மோதியது. 

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர். குணவதி மீது போலீஸ் ஜீப் ஏறியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 விபத்தை ஏற்படுத்திய போலீஸ் ஜீப்புக்கு அடியில் இருசக்கர வாகனம் சிக்கி 200 அடி தூரம் வரை இழுத்துசெல்லப்பட்டு சாலையோர பள்ளத்தில் நின்றது. குணவதியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க போலீசார் முயன்றனர்.

ஆனால் உறவினர்கள் வந்த பின் தான் உடலை எடுத்து செல்ல வேண்டும் என போலீசாரிடம் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். சிறிது நேரத்தில் உறவினர்கள் அங்கே குவிந்து விபத்தை ஏற்படுத்திய இன்ஸ்பெக்டரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். 

அப்போது சிலர் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சு நடத்தி கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இன்ஸ்பெக்டர் ராம ஆண்டவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
Tags:
Privacy and cookie settings