இந்தத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, கூட்டணி பேரங்கள் தீவிரமாக நடந்து வந்த நேரத்தில், பாஜவுக்கு தமிழகத்தில் 19 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.
ஆனால் உண்மையில் அந்தக் கட்சிக்கு வெறும் 2.7 சதவீத வாக்குகள் மட்டுமே இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, பாஜக, மதிமுக, பாமக என பல கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிட்டன. பாமகவின் அன்புமணி மட்டுமே அந்தத் தேர்தலில் தேறினார். அதன் பிறகு பாஜக அணியிலிருந்த அத்தனை கட்சிகளும் தெறித்து ஓடிவிட்டன.
ஐஜேகேவின் பாரிவேந்தர் மட்டுமே உடனிருந்தார். அந்த நிலையில்தான் கொஞ்சமும் கூசாமல், 'எங்கள் அணிக்கு எந்தக் கட்சி வந்தாலும் வராவிட்டாலும் கவலையிலைலை.
பிரதமர் மோடியின் அலை இன்னமும் வீசுகிறது. தமிழ்நாட்டில் எங்களின் வாக்கு வங்கி 19 சதவீதம் அப்படியே உள்ளது. தனித்தே ஆட்சியைப் பிடிப்போம்,' என்று கூசாமல் சொன்னார்.
அந்த 19 சதவீத வாக்குகள் எங்கே போயின? அடுத்தது பாமக... ஊரெல்லாம் தேர்தல் கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருந்தது நேற்று முன்தினம். ஐந்து கணிப்புகளில் மூன்று திமுகவுக்கும் இரண்டு திமுகவுக்கும் ஆதரவாக வந்து கொண்டிருந்தன.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் மக்கள் டிவி ஒரு கருத்துக் கணிப்பைச் சொன்னது பாருங்கள்... அடேங்கப்பா.. அந்தக் கணிப்பை எங்கு எப்படி எடுத்தார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை.
பொத்தாம் பொதுவாக 200 தொகுதிகளுக்கு மேல் பாட்டாளி மக்கள் கட்சி பெறும் என்று அடித்துவிட்டார்கள். கடைசியில் கட்சியின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி பெண்ணாகரத்தில் கூடத் தேறவில்லை.