ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சி மற்றும் அதிமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் கலந்து கொண்டார்.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் வேறு கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், திரையுலகினர், பல்துறைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டசபையின் முதல் வலிமையான பிரதான எதிர்க்கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ள திமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை திமுக ஏற்று தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்தது.
அதன்படி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடன் பொன்முடி, எ.வ.வேலு, கேபிபி சாமி, கு.பிச்சாண்டி, ப.ரங்கநாதன்,
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அன்பில் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, கு.க செல்வம், சுதர்சனம், மு.க.மோகன், தாயகம் கவி உள்ளிட்ட அவரது கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். ஜெயலலிதா பதவியேற்பில் ஸ்டாலின் கலந்து கொள்வது புதிதல்ல.
ஏற்கனவே கடந்த 2002ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற போது அவரும், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அன்பழகனும் கலந்து கொண்டனர் என்பது நினைவிருக்கலாம். அப்போது ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.