அதிமுக அரசு பதவியேற்பு விழா.. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் !

முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 
ஆனால் அவர்கள் கலந்து கொள்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் பங்கேற்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்கவுள்ளார். நாளை அவரும், அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். 

28 அமைச்சர்கள் நாளை முதல்வர் ஜெயலலிதாவுடன் பதவியேற்கவுள்ளனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. நாளை பிற்பகல் 12 மணிக்கு விழா நடக்கிறது. 

விழாவில் கலந்து கொள்ள பல்வேறு தரப்பினருக்கும் அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் நேரில் போய் அழைப்பிதழைக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம். 

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமீத் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், 

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பலரும் அழைப்பு போயுள்ளதாம். மு.க.ஸ்டாலின் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி பங்கேற்றால் ஜெயலலிதா பதவியேற்பை விட தான் பங்கேற்றதே முக்கியத்துவம் பெறும் என்பதால் அவர் பங்கேற்கலாம் என்று தெரிகிறது. ஆனால் அவர் அப்படி கலந்து கொண்டால் அது அதிசயமாக பார்க்கப்படாது. 

காரணம், ஏற்கனவே ஒருமுறை ஸ்டாலின், ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர் தான். 2002ம் ஆண்டு நடந்த ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது தலைமையில் புதிய அதிமுக அமைச்சரவை பதவியேற்றது. 

அந்தப் பதவியேற்பு விழாவில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகனும், அப்போது சென்னை மேயராக இருந்தவரான மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டனர். 

ஜெயலலிதாவைப் பார்த்து ஸ்டாலின் வணக்கம் வைக்க, ஜெயலலிதா பதிலுக்கு வணக்கம் வைக்க என்று திமுக - அதிமுக இணைந்து தெரிந்த அதிசயத்தை அன்று உலகமே கண்டது என்பது நினைவிருக்கலாம். 

எனவே அந்த அதிசயம் மீண்டும் நாளை நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings