காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் எதிரிகளை வைத்துள்ளவர் விஜயதாரணி. ஆனால் அதையும் மீறி, தேர்தல் போட்டிகளையும் மீறி, சவால்களைச் சந்தித்து 2வது முறையாக எம்.எல்.வாகியுள்ளார் விஜயதாரணி.
விளவங்கோடு தொகுதியையும் தக்க வைத்துள்ளார். கன்னி்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான விஜயதாரணியின் தாத்தா மறைந்த கவிமணி தேசிகவிநாயகம் ஆவார்
(இவரது பெயருக்குப் பின்னால் ஜாதியைச் சேர்ப்பது அவர் சுவாசித்த தமிழுக்கு இழுக்கு என்பதால் ஜாதிப் பெயரைச் சேர்க்கவில்லை).
ஆனால் கட்சியில் சுயம்புவாக வளர்ந்தவர் விஜயதாரணி. கடந்த 2011 தேர்தல்தான் முதல் முறையாக விஜயதாரணி போட்டியிட்ட சட்டசபைத் தேர்தலாகும்.
முதல் தேர்தலியே அட்டகாசமாக வென்றவர் விஜயதாரணி. அதை காங்கிரஸாரே கூட எதிர்பார்க்கவில்லை.
அதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக என மூன்று கட்சிகளும் பலம் வாய்ந்ததாக உள்ள தொகுதி விளவங்கோடு. ஆனால் அங்கு விஜயதாரணி வென்றது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. தற்போது மீண்டும் அதே தொகுதியில் கேஷுவலாக வென்று அசத்தியுள்ளார் விஜயதாரணி.
இந்தத் தேர்தலுக்கு முன்புதான் பல சிக்கல்களையும், போராட்டங்களையும் சந்தித்தார் விஜயதாரணி. அவருக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.
இளங்கோவனுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுக்கும் நிலையும் ஏற்பட்டது. மேலும் விஜயதாரணியின் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.
இதையடுத்து ராகுல் காந்தி வரை போய் விட்டார் விஜயதாரணி. இந்த நிலையில் அவரது கணவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்தப் பின்னணியில் சட்டசபைத் தேர்தலில் அவருக்கு மீண்டும் விளவங்கோடு தொகுதியில் சீட் கிடைத்தது.
தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த விஜயதாரணி, தொகுதியில் தனக்கென்று உள்ள சொந்த செல்வாக்காலும், திமுகவின் கூட்டணியாலும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தர்மராஜை 33143 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் லீமா ரோஸை 23,789 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார் விஜயதாரணி. தற்போது அதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டசபையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவராக இருந்து வந்தார் விஜயதாரணி என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அப்பதவியைப் பிடிக்க அவர் முயல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.