ஒடிஸா மாநிலத்தில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என அம்மாநில அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. ஒடிஸா மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமலாக்குவது
குறித்த மாநில அளவிலான உயர்நிலை ஆய்வுக் கூட்டம் புவனேஸ்வரில் நடைபெற்றது. அம்மாநில தலைமைச் செயலர் ஏ.பி.பதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சாலை விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
>
>
அதில், சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் பல்குகளில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது. இந்த அறிவுறுத்தலை காவல்துறையினர் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக ஒடிஸாவின் தலைமைச் செயலர் ஏ.பி.பதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐந்து முறைக்கு மேல் விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளின் லைசென்ஸை தாற்காலிகமாக ரத்து செய்யவேண்டும்.
இதுவரை சுமார் 18 ஆயிரம் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக விபத்துகள் அடிக்கடி நிகழும் 200 அபாயகரமான பகுதிகளை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
ஒடிஸாவில் தற்போது 8 சாலை விபத்து சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. விபத்தில் சிக்கியோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மேலும் 8 விபத்து சிகிச்சை மையங்கள் விரைவில் அமைக்கப்படும்.
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகமாக நடக்கும் இடங்களில் சீரமைக்கும் பணிகளை விரைவில் மேற்கொள்ளுமாறு பொதுப்பணித்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.