ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு நேற்று முன்தினம் மாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானம் ஓடு பாதையில் இருந்து கிளம்ப தயாரான போது விமானிக்கும், துணை விமானிக்கும் திடீரென்று தகராறு ஏற்பட்டது.
விமானத்தில் இருக்கும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட சில விவரங்களை குறிக்குமாறு, வயதில் மூத்தவரான துணை விமானியிடம் விமானி கூறினார்.
அப்போது துணை விமானியை அவர் ‘அங்கிள்’ (‘மாமா’) என்று கூறினார். தன்னை ‘அங்கிள்’ என்று குறிப்பிட்டது துணை விமானிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த துணை விமானி, விமானியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. என்றாலும் விமானம் அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றது. பின்னர் இதுகுறித்து விமானி முறைப்படி புகார் செய்தார்.
இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், சில பிரச்சினைகள் தொடர்பாக விமானிக்கும்,
துணை விமானிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாவும், அதுபற்றி விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
தங்களுக்குள் லேசான வாக்குவாதம் தான் நடந்ததாகவும், சண்டை எதுவும் நடக்கவில்லை என்று விமானி அறிக்கையில் தெரிவித்து இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
அத்துடன் இருவரும் பணி பட்டியலில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.