செளந்தரி, கிஷ்கிந்தாவில் ரூபாய் 5,800 சம்பளத்தில் வேலை செய்துவருபவர். அவரது மகன் குணசேகரனுக்கு வயது 15. பள்ளி விடுமுறை என்பதால், குணசேகரனுக்கும் இரண்டு மாதங்களுக்கு வேலை தரும்படி நிர்வாகத்திடம் செளந்தரி கேட்கிறார்.
நிர்வாகமும் கோடை காலம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும், அதுவும் சல்லிசான சம்பளத்தில் சுறுசுறுப்பான சிறுவன் கிடைக்கிறான் என்பதால் அவனை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறது.
கடந்த புதன்கிழமை இரவு, அனைவரும் பணி முடிந்து வீடு திரும்ப ஆயத்தமாகிறார்கள். அப்போது வாயிற் கதவுகளில் நின்ற காவலர்கள், “கொஞ்சம் பொறுங்கள்... அனைவரையும் நிர்வாகம் காத்திருக்க சொல்லி இருக்கிறது.
’டிஸ்கோ டான்சர்’ என்ற ராட்டினத்தை சோதிக்க வேண்டுமாம்...” என்றிருக்கிறார்கள். அனைவரும் முணுமுணுத்தப்படியே காத்திருக்கிறார்கள். ஆனால் குணசேகரனுக்கு மகிழ்ச்சி... தன்னால் எக்காலமும் கட்டணம் செலுத்தி ஏற முடியாத ராட்டினத்தில் ஏறப் போகிறோம் என்ற துறுதுறுப்பு.
சில மணி நேரங்களில் அவர்கள் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். டிஸ்கோ டான்சரில் ஏறும்படி பணிக்கப்படுகிறார்கள். சிலர் அச்சத்தில் மறுகிறார்கள்... ஆனால், அவர்களின் மேலதிகாரிகள் யாரையும் விடுவதாக இல்லை.
அவர்கள் ஏறி அமர்ந்த சில நிமிடங்களிலேயே அந்த கோர விபத்து நிகழ்கிறது. குணசேகரன் உட்பட, அனைவரும் தூக்கி வீசப்படுகிறார்கள். இதுவரை இருவர் இறந்துள்ளார். குணசேகரன் உட்பட ஒன்பது பேருக்கு பலத்த காயம்.
செளந்தரி, “வீட்டில் அவன் தனியா இருப்பானேன்னுதான் அவனை அங்க வேலைக்கு சேர்த்துவிட்டேன்... ஆனா, இப்படி ஆகும்னு கொஞ்சம்கூட நினைச்சு பார்க்கல...” என்று கதறி அழுகிறார்.
கேளிக்கை பூங்காக்களில் தொடரும் மரணங்கள்
இந்த விபத்தும், அழுகையும் தமிழக கேளிக்கை பூங்காக்களுக்கு புதிதல்ல... இதுவரை தமிழக கேளிக்கை பூங்காக்களில் நடந்த விபத்துகளில் மட்டும் பத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து இருக்கிறார்கள்.
பலர் படு காயம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால், இது நாள் வரை எந்த கேளிக்கை பூங்காக்கள் மீதும் பெயரளவிற்குகூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததில்லை.
ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற ஒற்றை கேள்விக்கான விடையில்தான், கேளிக்கை பூங்காக்களின் பெரும் வணிகம், அதனுடன் பின்னி பிணைந்திருக்கும் அரசியல் என அனைத்தும் ஒளிந்து இருக்கிறது.
பலர் கேளிக்கை பூங்காக்களில் மரணம் நிகழ்ந்திருந்தாலும், இப்பிரச்னை பொதுவெளிக்கு வந்தது 2012 ம் ஆண்டு நடந்த அஃபியா மஹ்கின் மரணத்திற்கு பின்புதான். அஃபியா மஹ், அப்போது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் வேலை பார்த்து வந்தார்.
விடுமுறைக்காக ஈ.வி.பி. கேளிக்கை பூங்காவிற்கு தன் நண்பர்களுடன் வந்தவர், அங்கிருந்த ‘ஆக்டோபஸ் ரைட்’ ராட்டினத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார்.
அதுவரை தமிழக கேளிக்கை பூங்கா மரணங்களை கண்டு கொள்ளாமல் இருந்த தேசிய ஊடகங்கள், இது தொடர்பாக விவாதிக்க துவங்கியது.
அப்போதுதான், ஏப்ரல் மாதத்தில் அதே ஈ.வி.பி. பூங்காவில் நடந்த விபத்து, பொது சமூகத்திற்கு தெரிய வந்தது. ஈ.வி.பி. பெருமாள் சாமி ரெட்டி கைது செய்யப்பட்டார். ரூபாய் 25 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்து அந்த வழக்கு, 2015 ம் ஆண்டு முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.
மலைக்க வைக்கும் கேளிக்கை பூங்கா வணிகம்
இது வரை நடந்த எந்த விபத்திலும், கேளிக்கை பூங்காக்கள் மீது ஒரு சிறு நடவடிக்கைகூட எடுக்கப்பட்டதில்லை.
அதற்கு காரணம், முன்பே சொன்ன அதன் வணிகம். இந்தியாவில் மொத்தம் 120 கேளிக்கை பூங்காக்கள் இருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை அதன் வணிக மதிப்பு ஆண்டுக்கு ரூபாய் 400 கோடிகள்.
இப்போது ரூபாய் 1,700 கோடி. இது 2020 ல், ரூபாய் 4,000 கோடிகளை எட்டிவிடுமென்று எதிர்பார்ப்பதாக இந்திய கேளிக்கை பூங்காக்களின் கூட்டமைப்பின் தலைவர் அஜய் கூறுகிறார்.
2008-09 பொருளாதார மந்த நிலையின்போது கூட இந்த கேளிக்கை பூங்காக்களின் வணிகம், சரிவை சந்திக்கவில்லை. அப்போதுகூட அது 15 சதவீத வளர்ச்சியையே கண்டுள்ளது.
இப்போது இது ஆண்டுக்கு 17.5 சதவீத வளர்ச்சியை காண்கிறது. இந்த வளர்ச்சியும், இந்த வணிகமும்தான் பலரை இந்த துறையில் முதலீடு செய்ய தூண்டுகிறது. இதே காரணத்திற்காகதான் அரசின் கடும் நடவடிக்கைகளிலிருந்தும் தொடர்ந்து தப்பி வருகிறது.
நவீன பொருளாதாரத்தின் செல்லப் பிள்ளைகள்
நவீன பொருளாதாரத்தின் செல்லப் பிள்ளைகள் இந்த கேளிக்கை விடுதிகள். ஆம், பொருள் ஈட்டுவதே சமூக அங்கீகாரத்திற்கான அளவீடாக மாறிவிட்ட இக்காலத்தில்,
வாரத்திற்கு ஏழு நாட்களும், இருபத்து நான்கு மணி நேரமும், மனிதன் உழைக்க தயாராக இருக்கிறான். அவனுக்கு பறவைகளின் கீச்சிசையை கவனிக்க நேரமில்லை, அவனால் பூக்களை கவனிக்க முடிவதில்லை.
அவனுக்கு கிடைக்கும் நேரத்தில், அவன் கவலைகளை மறக்கும் இடமாக இந்த கேளிக்கை விடுதிகள் மட்டும்தான் இருக்கிறது. அதனால், தான் கிஷ்கிந்தா விபத்து நடந்து அடுத்த நாள் கூட, மக்கள் கும்பல் கும்பலாக கிஷ்கிந்தா செல்ல குவிந்தனர்.
உண்மையில் பெருநகரங்களில் மக்களுக்கு தங்கள் அழுத்தங்களிலிருந்து மீள வழியில்லை. இதனால்தான் பொருளாதார மந்தநிலையின் போதுகூட இத்துறையின் வளர்ச்சி 15 சதவீதமாக இருந்து இருக்கிறது.
பொருளாதார கொள்கைகளில் மாற்றம் வராமல் நாம் தட்டையாக, 'ஏன் கேளிக்கை விடுதிகளுக்கு போகிறீர்கள்...?' என்று கேட்பது குரூரமாகதான் இருக்கும்.
ஆனால், வரிகள் மூலமாக ஒரு குறிப்பிடத்தக்க வருவாயை கொண்டு வரும் கேளிக்கை பூங்காக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது அரசின் உடனடி கடமை.
கேளிக்கை பூங்காக்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள்:
2004 ம் ஆண்டு வரை அரசு இந்த கேளிக்கை பூங்காக்களின் பாதுகாப்பிற்கென எந்த செயல்திட்டமும் வைத்திருக்கவில்லை. அதை கண்காணிக்க எந்த வரைமுறைகளையும் வகுக்கவில்லை.
2004 ம் ஆண்டு தான் இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.எஸ். ஐ), இதற்கென சில வழிக்காட்டுதல்களை வழங்குகிறது. ஆனால், இது நாள்வரை அரசு இதை கண்காணிப்பதற்காக எந்த தனி அமைப்பையும் ஏற்படுத்தவில்லை.
மாவட்ட நிர்வாகம்தான் இதனை கண்காணித்து தகுதி சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஆனால், மாவட்ட நிர்வாகம் எப்போதும், இது போன்ற விபத்துகள் நடந்தால் மட்டுமே அங்கு சென்று பார்வையிடுகிறது.
அதுதான் இதுபோன்ற விபத்துகளில் முடிகிறது. கேளிக்கை பூங்காக்களில் நடக்கும் விபத்திற்காக வழக்கு பதிய வேண்டுமானால்,
அந்த பூங்காவின் உரிமையாளரோடு சேர்த்து, அந்த பூங்கா அமைந்துள்ள மாவட்டத்தின் ஆட்சியர் மீதும்தான் வழக்கு பதிய வேண்டும். அப்போதுதான், அவர்கள் விழிப்போடு இருப்பார்கள். இது போன்ற விபத்துகளும் நடக்காது.
அரசே எந்த வரைமுறையும் வகுக்காதபோது, நம்மை எந்த தூதனும் வந்து விபத்திகளிலிருந்து காத்துவிட முடியாது. நம்மை நாம்தான் காத்துக் கொள்ள வேண்டும். தீம் பார்க்கிற்கு செல்பவர்கள், அச்சமாக இருக்கிறதென்றால், ராட்டின விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும்.
சாகசத்திற்காக விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம். நீச்சல் தெரியாதவர்கள் நீச்சல் குளத்தில் இறங்க வேண்டாம். சீட் பெல்ட் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்துவோம்.
கேளிக்கை பூங்காக்களில் விரக்தியில் வாழ்பவர்கள்
அனைவருக்கும் மகிழ்ச்சியை தர வேண்டிய கேளிக்கை பூங்காக்கள், தன் ஊழியர்களை எப்போதும் விரக்தியிலேயேதான் வைத்து இருக்கிறது. ஆம் அங்கு பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு சம்பளம் ரூ 6,000 த்திற்கும் கீழ்தான் இருக்கும்.
அதுவும் இவர்களின் பணி சுமை, விடுமுறை நாட்களில் மிக அதிகமாக இருக்கும். “விடுமுறை நாட்களில் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்கு மேல்கூட பணி செய்ய நேரிடும்...” என்கிறார் ஒரு ஊழியர்.
கேளிக்கை பூங்காக்களில் நடக்கும் தண்ணீர் கொள்ளை
விபத்து, உழைப்பு சுரண்டல் என்பதையெல்லாம் தாண்டி, இந்த பூங்காக்கள் அளப்பெரிய சூழலியல் கேட்டிற்கு காரணமாக இருக்கின்றன. அளவிற்கு மீறி தண்ணீரை சுரண்டுகின்றன.
தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்திய அளவிலும் இதுதான் நடக்கிறது. சென்ற ஆண்டு வட டெல்லி நகர் மன்ற கூட்டத்தில், கேளிக்கை பூங்காக்கள் நிலத்தடி நீரை முறையற்று உறிஞ்சுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பதிலளித்த அதிகாரிகள்,' டெல்லியில் தண்ணீரை பயன்படுத்தும் எந்த கேளிக்கை பூங்காக்களுக்கும் அனுமதி தரப்படவில்லை' என்றனர்.
ஆனால், அப்போது டெல்லியில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் தண்ணீர் சம்பந்தமான விளையாட்டுகள் இருந்தன. எதிர்க்கட்சிகள் இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய பின்,
ஒரு பூங்காவில் அனுமதி வாங்காமல் தண்ணீர் எடுக்க பயன்பட்ட ஐந்து ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக நகர்மன்றம் சொல்லியது. அதன்பின்தான், கேளிக்கை பூங்காக்களின் தண்ணீர் பயன்பாட்டை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டது.
இதுதான் தமிழகத்தில் உள்ள பூங்காக்களிலும் நடக்கிறது. தமிழகமே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும்போது, இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து தண்ணீர் தடையில்லாமல் கிடைக்கிறது.
பெரும்பாலும் முறைகேடான ஆழ்துளை கிணறுகளிலிருந்தே தண்ணீர் எடுக்கிறார்கள். இதையும் அரசு தனி குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
இறந்தவர்களுக்காக பேசுவது மட்டுமல்ல, கேளிக்கை பூங்காகளில் நடக்கும் உழைப்பு சுரண்டல், தண்ணீர் கொள்ளை அனைத்திற்கும் சேர்த்து நீதி கோருவதுதான் உண்மையான தீர்வை தரும். அதுதான் அறமாகவும் இருக்கும்!