அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டெல் நகரில் தனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒரு வாலிபரை அத்துமீறி அந்த வீட்டுக்குள் நுழைந்து கற்பழித்த பெண்ணுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? என அமெரிக்க ஊடகங்கள் விவாத மேடை நடத்தி வருகின்றன.
ஒரு ஆணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சண்டாயே மேரி கில்மான்(28) என்ற அந்தப் பெண் மூன்று குழந்தைகளுக்கு தாய் என்று கூறப்படுகின்றது. “இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பதுபற்றி எனக்கு ஒன்றுமே நினைவில்லை.
ஆனால், அந்த வாலிபரை பலவந்தப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டதை நான் ஒப்புக் கொள்கிறேன்” என கூறும் அந்தப் பெண்ணுக்கு ‘பைபோலார் டிஸ்ஆர்டர்’ மற்றும் மனநோய் பாதிப்பு உள்ளதாக அவரது வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி சியாட்டெல் நகர போலீசில் புகார் அளித்த அந்த வாலிபர், “சம்பவத்தன்று கடுமையான வேலையால் களைத்துப்போய் எனது வீட்டில் படுத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தேன்.
அதிகாலை சுமார் 2 மணியளவில் என் மீது ஏதோ கனமான பொருள் இருப்பதாக உணர்ந்த நான், கண்விழித்து பார்த்தபோது, எனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத அந்தப் பெண் என்னை பலாத்காரம் செய்து கொண்டிருப்பதை அறிந்ததும்,
உடனடியாக துள்ளி எழுந்து, அவளை கீழே தள்ளினேன். என்னை பேசாமல் இருக்கும்படி கூறிய அவள், மீண்டும் என்னை ஆக்கிரமிக்க முயன்றாள்.
பின்னர், அவளது கழுத்தை பிடித்து, வீட்டுக்கு வெளியே தள்ளி கதவைப் பூட்டி விட்டேன்.
நீண்ட நேரமாக கதவை தட்டியபடி நின்றிருந்த அவள், பிறகு அங்கிருந்து சென்று விட்டாள்” என வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாலிபருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் ஏற்பட்டிருந்த சில காயங்களும்,
அந்த பெண்ணின் டி.என்.ஏ.வுடன் கூடிய ஆதாரமும் அந்த வாலிபரின் வாக்குமூலம் உண்மையானதுதான் என்பதை உறுதிப்படுத்தியதையடுத்து, சண்டாயே மேரி கில்மானை கைது செய்த போலீசார், அவர் மீது சியாட்டெல் நகர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
தற்போது, சிறையில் இருந்தவாறு வழக்கு விசாரணையில் ஆஜராகிவரும் அந்தப் பெண்ணுக்கு வரும் ஜூன் மாதம் 19-ம் தேதி வழங்கப்படவுள்ள தீர்ப்பில் குறைந்தபட்சம் இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.