இன்சுலினை நிறுத்த சொன்ன அக்குபஞ்சர் டாக்டர்.. மாணவன் பலி !

அக்குபஞ்சர் டாக்டர் ஆலோசனைப்படி இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தியதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட திருப்பூர் மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த மெக்கானிக் ஜெகதீஷ் என்பவரது மகன் சுபாஷ். பிளஸ் 2 படித்து வந்த சுபாஷ் 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார்.
அவருக்கு தினமும் 2 முறை இன்சுலின் ஊசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த அக்கு ஹீலர் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வரும் அக்குபஞ்சர் டாக்டரான பாலமுருகனிடம் சுபாஷை ஜெகதீஷ் அழைத்து சென்றிருக்கிறார்.

அப்போது இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்திவிடுங்கள்... அக்குபஞ்சர் சிகிச்சையில் சரி செய்கிறேன் என பாலமுருகன் கூறியிருக்கிறார். இதை கேட்டு ஜெகதீஷும் மகன் சுபாஷுக்கு இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தியிருக்கிறார்.

ஆனால் 2 நாட்களில் திடீரென சுபாஷின் உடல்நிலை மோசமடைந்தது. அப்போதும் 'அக்குபஞ்சர்' பாலமுருகனையே ஜெகதீஷ் தொடர்பு கொண்டு கேட்க நிலைமை சரியாகிவிடும் என கூறியிருக்கிறார்.

இருப்பினும் சுபாஷ் உடல்நிலை மோசடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அக்குபஞ்சர் மருத்துவரின் தவறான ஆலோசனையால் ஒரு இளம்தளிரின் உயிர் பறிபோயுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Privacy and cookie settings