தேமுதிகவினரால் துரோகிகள் என அழைக்கப்பட்ட, தேமுதிகவிலிருந்து வெளியேறி, மக்கள் தேமுதிக என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து,
கடைசி நேரத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்து 3 இடங்களைப் பெற்றுப் போட்டியிட்டு போண்டியாகியுள்ளனர் அந்த மூன்று முன்னாள் தேமுதிகவினரும்.
என்ன ஒரு ஆறுதல் என்றால், ஊரெல்லாம் தேமுதிகவினர் டெபாசிட்டைப் பறி கொடுத்தனர் என்றால் இவர்கள் மட்டும் டெபாசிட்டைத் திரும்பப் பெற்றுள்ளனர் - எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால். ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார்.
இவர் இதே தொகுதியில்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட முத்துச்சாமியை வீழ்த்தியிருந்தார். மேட்டூர் தொகுதியில் எஸ்.ஆர். பார்த்திபன் போட்டியிட்டிருந்தார். இவர் 2011 தேர்தலில் பாமக தலைவர் ஜி.கே.மணியை வீழ்த்தியவர்.
கும்மிடிப்பூண்டி தொகுதியில் சி.எச் சேகர் கடந்த தேர்தலில் அதிமுகவின் கே.எஸ். விஜயக்குமாரை வீழ்த்தியிருந்தார். இந்த மூன்று பேரும் இதே தொகுதிகளில் இந்த முறையும் போட்டியிட்டனர். ஆனால் மூன்று பேருமே தேறவில்லை.
ஈரோடு கிழக்கில் சந்திரகுமாரை, அதிமுகவின் கே.எஸ். தென்னரசு 7794 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கும்மிடிப்பூண்டியில் சி.எச். சேகரை அதிமுகவின் கே.எஸ். விஜயக்குமார் 23,395 வாக்குகள் வித்தியாசத்தில் சாய்த்தார்.
மேட்டூர் தொகுதியில் எஸ்.ஆர் பார்த்திபனை அதிமுகவின் செம்மலை 6282 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். என்ன ஒரு ஒற்றுமை என்றால் தேமுதிகவிலிருந்து திமுக சின்னத்தில் போட்டியிட்ட இந்த மூன்று பேரையும் வீழ்த்தியது அதிமுக வேட்பாளர்கள்!