ஸ்டாலின் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அதிகாரிகள் முன்னரே எனக்குத் தெரிவித்திருப்பார்கள் என்றால் நடைமுறை விதிகளைத் தளர்த்தி அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கியிருப்பேன் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொண்ட விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.
திமுக பொருளாளர் மு.க. ல்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா வேண்டும் என்றே ஸ்டாலினை அவமதித்துவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எனது பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விழா அரங்கில் எம்.எல்.ஏ.க்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் ஸ்டாலின் அமர்ந்திருந்தார்.
பொதுப் பணித்துறை அதிகாரிகள் பதவி வரிசைப்படியே இருக்கையை ஒதுக்கியுள்ளனர். எனவே, ஸ்டாலின் அவருக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதில் ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தாலும்,
அவருக்கு நான் இத்தருணத்தில் ஒரு விளக்கத்தை தர விரும்புகிறேன். இருக்கை ஒதுக்கீடு மூலம் திமுகவையோ, ஸ்டாலினையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை.
ஒருவேளை, ஸ்டாலின் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அதிகாரிகள் முன்னரே எனக்குத் தெரிவித்திருப்பார்கள் என்றால் நடைமுறை விதிகளைத் தளர்த்தி அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கியிருப்பேன்.
மாநில மேம்பாட்டிற்காக ஸ்டாலினும், அவரது கட்சியும் செயல்பட எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.