இதுவரை டெவலப்பிங் கன்ட்ரி (பொருளாதார ரீதியாக வளரும் நாடு) என்று அறியப்பட்டு வந்த, அழைக்கப்பட்டு வந்த இந்தியாவை இனி லோயர் மிடில் இன்கம் நாடு என்று அழைக்கப் போகிறார்கள்.
இப்படித்தான் இந்தியாவை புதிதாக வகைப்படுத்தி யுள்ளது உலக வங்கி. அதாவது நாம் பணக்காரனும் கிடையாது, ஏழையும் கிடையாது. மத்திய தர வர்க்கமும் கிடையாது.
இரண்டும் கெட்டனாக நாம் உலக வங்கியால் வகைப்படுத்தப் பட்டுள்ளோம். இத்தனை காலமாக நம்மை ஆண்ட அரசுகள் நம்மை இரண்டும் கெட்டானாக கொண்டு வந்து விட்டுள்ளன.
டெவலப்ட் மற்றும் டெவலப்பிங் ஆகிய இரு வார்த்தைகள் தான் பல காலமாக ஒரு நாட்டின் பொருளாதார ரீதியான நிலையை அறிய பயன்படுத்தப்பட்டு வந்த இரு வார்த்தைகள்.
அமெரிக்கா என்றால் டெவலப்ட், இந்தியா என்றால் டெவலப்பிங். தற்போது அந்தப் பதத்தை மாற்றியுள்ளது உலக வங்கி. லோயர் மிடில் இன்கம் மற்றும் அப்பர் மிடில் இன்கம் என்ற புதிய வகைப்பாட்டை அது கொண்டு வந்துள்ளது.
உலக வங்கியைப் பொறுத்தவரை இந்தியா வளரும் நாடு அல்ல. மாறாக தெற்காசியாவில் உள்ள லோயர் மிடில் வருமானம் கொண்ட நாடு மட்டுமே.
இந்தியாவும் வளரும் நாடுதான் என்றாலும் கூட அனைத்து வளரும் நாடுகளையும் ஒரே தரத்தில் வைக்க முடியாது என்று உலக வங்கி கூறுகிறது.
உதாரணத்திற்கு, இந்தியா, மெக்சிகோ, மலாவி ஆகியவை வளரும் நாடுகள் தான் என்றாலும் கூட மூன்று நாடுகளையும் ஒப்பிட முடியாது என்று அது வாதிடுகிறது.
மலாவியின் தனி நபர் ஆண்டு வருமானம் 250 டாலர்கள் தான். அது மெக்சிகோவில் 9860 டாலராக உள்ளதாக உலக வங்கி கூறுகிறது. எனவே இவற்றை சமமாக பாவிக்க முடியாது என்பது உலக வங்கியின் வாதம்.
இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் குறைந்த அளவிலான வளர்ச்சியில் இருப்பதாலும், உலகளாவிய அளவுக்கு இல்லை என்பதாலும், இந்தியாவை லோயர் மிடில் இன்கம் நாடாக வகைப்படுத்தி யுள்ளது உலக வங்கி.
மெக்சிகோ, சீனா, பிரேசில் ஆகியவை அப்பர் மிடில் இன்கம் நாடுகள் பிரிவில் வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் லோயர் இன்கம் பிரிவு நாடுகளாம்.
மலாவி நாட்டை லோயர் இன்கம் பிரிவில் சேர்த்துள்ளனர். இனி எந்த நாட்டையும் வளரும் நாடு என்று உலக வங்கி பொத்தாம் பொதுவாக கூப்பிடாது. மாறாக, புதிய பெயர்களில் தான் அழைக்குமாம்.
இந்தியாவைப் பொறுத்த வரை பல பிரிவுகளில் அது பின்தங்கி யுள்ளதாக உலக வங்கி கூறுகிறது. குறிப்பாக துப்புறவு, மின் உற்பத்தி உள்ளிட்டவற்றில் இந்தியாவின் நிலை மோசமாக உள்ளதாக கூறுகிறது.
அதே சமயம், பிறப்பு இறப்பு விகிதத்தில் இந்தியா முன்னேற்றமாக இருப்பதாக அது கூறுகிறது. இந்தியாவில் ஒரு வர்த்தகத்தைத் தொடங்க குறைந்தது 29 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக உலக வங்கி கூறுகிறது.
இது உலக அளவிலான சராசரியான 20 நாட்களை விட 9 நாட்கள் அதிகமாகும். அனைவருக்கும் துப்புறவு என்பதில் உலக அளவிலான சராசரி 68 சதவீதமாக உள்ளது.
ஆனால் இந்தியாவில் இது 40 சதவீதமாக உள்ளது. அதாவது இந்தியர்களில் 40 சதவீதம் பேருக்கு மட்டுமே சிறந்த துப்புறவு வசதி கிடைப்பதாக அது கூறுகிறது.
உலக வங்கியின் முடிவை ஐ.நாவும் பின்பற்றும் என்றே தெரிகிறது. தற்போது ஐ.நா.வின் கணக்குப்படி 159 நாடுகளை அது பொத்தாம் பொதுவாக வளரும் நாடுகள் என்று வகைப்படுத்தி யுள்ளது.
அதை இனி ஐ.நா. மாற்றலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஐ.நா.வின் தற்போதைய வகைப்பாட்டின் படி ஐரோப்பிய நாடுகள், வடக்கு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவை வளர்ந்த நாடுகளாகும்.
மற்ற அனைத்து நாடுகளும் வளரும் நாடுகளாகும். அதே போல மிகவும் குறைந்த வளர்ச்சியைப் பெற்றுள்ள நாடுகள் என்ற பட்டியலையும் ஐ.நா. பராமரித்து வருகிறது.
தற்போது இதில் எல்லாம் மாற்றம் வரும் என்று தெரிகிறது.