ஸ்பீட் போஸ்ட் மூலம் தலாக் சொல்லப்பட்ட மூஸ்லீம் பெண் மூன்று முறை தலாக் கூறும் முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ஆப்ரீன் ரஹ்மான் (25).
அவருக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவருக்கு திருமண இணையதளம் (மேட்ரிமோனியல் போர்ட்டல்) மூலம் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டது.
ஆப்ரீனை அவரது கணவர் ஸ்பீட்போஸ்ட் மூலம் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இதை எதிர்த்து ஆப்ரீன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து ஆப்ரீன் கூறுகையில், திருமணமாகி 2 மாதத்திலேயே வரதட்சணை கேட்டு என் மாமனார், மாமியார் என்னை கொடுமைப்படுத்த துவங்கினர்.
வரதட்சணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்தியதோடு வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினர். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நான் என் தாய் வீட்டிற்கு வந்துவிட்டேன்.
தற்போது எனக்கு ஒரு ஸ்பீட்போஸ்ட் வந்தது. என் கணவர் தான் ஸ்பீட்போஸ்ட் மூலம் மூன்று முறை தலாக் கூறி என்னை விவாகரத்து செய்துள்ளார். இதை எதிர்த்து நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.