வட தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது தாழ்வு மண்டலம் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்.
தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கக் கடற்கரையிலிருந்து தாழ்வு மண்டலத்தின் தாக்கம் கிட்டத்தட்ட முழுமையாக விலகி விட்டதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தாழ்வு மண்டலமானது வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கக் கடலில் நிலை கொண்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, இப்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி, சென்னைக்கு 120 கிமீ அருகே மையம் கொண்டுள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் மிகப் பலத்தை மழை பெய்தது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், "ஆழந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது சென்னையிலிருந்து 120 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
அது ஆந்திரா அல்லது ஒடிசா நோக்கி நகர்ந்து செல்லக் கூடும். இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட பகுதிகளில் கன மழை பெய்யும்.
தென் தமிழக மாவட்டங்களில் மழை குறையும். ஆங்காங்க லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது.
பொன்னேரியில் 15 செமீ, மாமல்லபுரத்தில் 14 செமீ, செம்பரம்பாக்கம் மற்றும் விமான நிலையப் பகுதியில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. வடகடலோர மாவட்டங்களின் கரையோர மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்," என்றார்.
இலங்கையை புரட்டிப் போட்ட வெள்ளம் இதற்கிடையே, இலங்கையில் மழை மற்றும் வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வெள்ளத்தில் சிக்கி 16 பேர் இறந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக இலங்கையில் பேய் மழை கொட்டித் தீர்த்தது. கிட்டத்தட்ட 19 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனவாம். மண் சரிவு, வெள்ளம் உள்ளிட்டவற்றில் சிக்கி பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோருக்காக 176 தற்காலிக இருப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என ராணுவம் கூறியுள்ளது.