தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பொதுவான கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், ஏப்ரல், 23 முதல், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும், மே, 1 முதல் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை துவங்கியது. விடுமுறை காலம் முடிந்து, ஜூன் 1.ல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாளாக சென்னையில் 106 டிகிரியில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று அளித்த தகவலின்படி, அடுத்த மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் 1.ல் இருந்து 3 டிகிரி வரை உயருமாம்.
தற்போதைய வெயிலிலே தாக்குப் பிடிக்கமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெயில் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொதுமக்களின் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலையொட்டி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மே 21 வரை பெரும்பாலான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விடுமுறை இல்லாமல் வேலை செய்யும் நிலை ஏற்பட்டது.
இதனால் இந்த ஆண்டு தங்கள் குழந்தைகளுடன் கோடை விடுமுறையை கழிக்கமுடியவில்லை என ஆசிரியர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. தற்போது, சாதரணமாக சதம் அடிக்கும் வெயிலினால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஜுன் 1.ல் பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் மாணவர்களும் இந்த வெயிலின் தாக்கத்தில் பாதிக்கப்படுவார்கள் என பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். எனவே, இன்னும் ஒரு வார காலம் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றம் செய்வது குறித்து அரசு எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
அரசு அறிவிப்பு கொடுத்தால் தான் பள்ளிகள் திறப்பை ஜூன் 1-ந் தேதியில் இருந்து தள்ளி வைப்பது குறித்து தெரிவிக்க முடியும் என்று கூறினார்.