சவூதி அரேபியாவில் ஆண்களுக்கான மசாஜ் மையங்களில் அசிங்கமான செயல்கள் நடைபெறுவதாக கூறி 15 மையங்களை இழுத்து மூடி சீல் வைத்து கடும் நடவடிக்கை எடுத்துள்ளது சவூதி அரசு. ரியாத் நகரில் இந்த மையங்களே செயல்பட்டு வந்தன.
இந்த மையங்களில் அசிங்கமான செயல்கள் நடப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அதிகாரிகள் இவற்றை இழுத்து மூடி சீல் வைத்து விட்டனர்.
மேலும் இந்த மையங்களில் பணியாற்றி வந்த 14 ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும், இனிமேல் சவூதி பக்கமே வரக் கூடாது என்றும் தடை விதித்துள்ளது சவூதி அரசு.
தொழிலாளர்கள் சட்டத்தை மீறி விட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த செய்தி சவூதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவூதியில் உள்ள ஆண்களுக்கான மசாஜ் மையங்களில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிய தொழிலாளர்கள் (ஆண்கள்) தவறான செயல்களில் ஈடுபடுவதாக பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.
இதுகுறித்து சவூதியைச் சேர்ந்த அகமது என்பவர் கூறுகையில், நான் மசாஜ் மையத்திற்குப் போகும்போதெல்லாம் அங்கு தடை செய்யப்பட்ட செயல்களில் ஈடுபடுவார்கள் இந்த ஊழியர்கள்.
அவர்கள் நேரடியாக உங்களிடம் கேட்க மாட்டார்கள். மாறாக தொடுகை மற்றும் பார்வை மூலமாக அதை வெளிப்படுத்துவார்கள். இப்படிப்பட்ட மையங்கள் மீது நடவடிக்கை எடுப்பது நல்ல விஷயம்தான் என்றார்.
நைஃப் என்பவர் கூறுகையில், இதுபோன்ற மையங்களுக்குப் போகவே கூடாது. உங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று தோன்றினால் உங்களது மனைவிகளிடம் செய்யச் சொல்லுங்கள். அதுதான் சரியானது, பொருத்தமானது என்றார்.