தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் பாதியிலேயே வீடு திரும்பிய சம்பவம் போலீசாரிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. ஜெயலலிதா நேற்று தனது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி காரில் சென்றார்.
அவர் இசெட் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர் என்பதால் அப்படையினர் மற்றும் மாநில போலீசாரின் பாதுகாப்பு அணிவகுக்க கோட்டை நோக்கி ஜெயலலிதா பயணித்தார்.
பகல் 12:38 மணிக்கு, காமராஜர் சாலையில் உள்ள, டி.ஜி.பி. அலுவலகம் அருகே கார் சென்ற போது, முதல்வர், திடீரென காரை வீட்டுக்கு திருப்பும்படி ஓட்டுனரிடம் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, டிரைவர் காரை வீட்டுக்கு திருப்பினார். தகவல் கிடைத்ததும், அவரது காருக்கு முன்னே சென்ற பைலட் -2, வாகன போலீசாரும் வாகனத்தை திருப்பி விட்டனர்.
ஆனால், முதலில் சென்ற பைலட் - 1 வாகன போலீசாருக்கு தகவல் தொடர்பில் தாமதம் ஏற்பட்டதால், தாமதமாகவே வாகனத்தை திருப்ப வேண்டிய நிலைக்கு ஆளாகினர். போயஸ் இல்லம் திரும்பிய முதல்வர், 10 நிமிட ஓய்வுக்கு பிறகு, மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு புறப்பட்டார்.
பின்னர் மதியம் 2:30 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. நேற்று ஜெயலலிதா சற்று சோர்வாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.