வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்த 14 வயது சிறுவனை சிங்கம் தாக்கி கொன்று சாப்பிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அமரேலி மாவட்டம்,
அம்பராடி கிராமம், கிர் வனவிலங்கு காப்பகத்தின் அருகே அமைந்துள்ளது. இங்குள்ள மாம்பழ தோட்டத்தில் வேலை செய்வதற்காக கூலித் தொழிலாளி குடும்பம் ஒன்று வந்திருந்தது.
தோட்டத்தின் உரிமையாளர், அந்த கூலித் தொழிலாளி குடும்பத்தினருக்கு, தங்குவதற்கு வீடு கொடுத்திருந்த போதிலும் கூட, வெப்பம் காரணமாக, வீட்டை விட்டு வெளியே தொழிலாளிகள் படுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற சிங்கம் ஒன்று, பெற்றோருடன் படுத்திருந்த 14 வயது சிறுவனை கடித்து இழுத்து சென்றுள்ளது.
மகனை காணோம் என்று பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசாரும், வனத்துறையினரும் தேடுதல் வேட்டை நடத்தியபோது,
சிறுவனின் உடல் பாகங்கள் ஆங்காங்கு சிதறிக்கிடந்தது தெரியவந்தது. சிங்கம் அவனை கொன்று சாப்பிட்டு, எஞ்சிய உடலை தனது இருப்பிடத்திற்கு இழுத்து சென்றுள்ளது என்று தெரியவருகிறது.
இது குறித்து கிர் வன காப்பாக, தாரி-கிழக்கு ரேஞ் துணை வன பாதுகாவலர் டி.கருப்பசாமி கூறியதாவது: சுமார் 3 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு, சிறுவனது உடலை கண்டுபிடித்தோம்.
இந்த குடும்பத்தார் வீட்டுக்குள் படுத்து தூங்கியிருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது. சுமார் 16 சிங்கங்கள், இந்த வழியாக ஷெட்ருஞ்சி நதிக்கு செல்லும் பாதையில் இக்கிராமம் அமைந்துள்ளது.
இது சிங்கங்கள் செல்லும் காரிடார். எனவேதான், கிராம மக்கள் இரவில் வீட்டுக்குள் படுத்து தூங்குமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தனர். இவ்வாறு கருப்பசாமி தெரிவித்தார்.