காணாமல் போய் விட்ட தனது 65 வயது தாயாரை வெப்சைட் தொடங்கி, பரிசு அறிவித்துத் தேடி வருகிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர்.
அந்த சாப்ட்வேர் என்ஜீனியரின் பெயர் சதீஷ் ஷெட்டி. உடுப்பி மாவட்டம் குண்டாபூர் தாலுகாவில் உள்ள கோர்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
இந்த வீட்டிலிருந்து இவரது தாயார் மாலதி ஷெட்டி ஜூன் 24ம் தேதி புதன்கிழமை வெளியே போனவர் காணாமல் போய் விட்டார். உறவினர் வீட்டுக்குப் போன தாயார் வீடு திரும்பவில்லை என்று கூறுகிறார் சதீஷ்.
இந்த நிலையில் தனது தாயாரைத் தேடி வரும் ஒரு இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். அதில் தனது தாயாரின் புகைப்படம், விவரம் உள்ளிட்டவற்றை போட்டுள்ளார்.
ஆகஸ்ட் 8ம் தேதி http://www.mommissing.org/ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார். அதில், எனது தாயார் மாலதி ஷெட்டி, கோர்கி கிராமம், சாருகோட்டிகே என்ற இடத்தில் வசித்து வந்தார். ஜூன் 24ம் தேதி முதல் அவரைக் காணவில்லை.
வீட்டில் எனது தந்தை கேடூர் பாஸ்கர் ஷெட்டி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), சகோதரி சரளா ஷெட்டி மற்றும் அவரது கணவர் டாக்டர் ராம் மனோகர் ஷெட்டி ஆகியோரும் வசித்து வருகின்றனர்.
ஜூன் 24ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தனது உறவினர் வீட்டுக்குப் போவதாக சொல்லி விட்டுக் கிளம்பினார். ஆனால் அவர் வரவில்லை.
எனது தாயார் காணாமல் போன தகவல் கிடைத்ததும் வெளிநாட்டில் வசித்து வரும் நான் ஜூலை 4ம் தேதி தாயகம் திரும்பினேன். ஜூலை 19ம் தேதி வரை அங்கே தங்கியிருந்து எனது தாயாரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
உடுப்பி எஸ்.பி. அண்ணாமலையை சந்தித்து எனது தாயாரைத் தீவிரமாகத் தேடும்படி கேட்டுக் கொண்டேன். மேலும் ஜூலை 17ம் தேதி உடுப்பியில் செய்தியாளர்கள் கூட்டத்தையும் கூட்டி தகவல் தெரிவித்தேன்.
எனது தாயாரின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களையும் கோவில்கள், பஸ் நிலையங்களில் ஒட்டியுள்ளோம். எனது தாயார் காணாமல் போய் 45 நாட்களாகி விட்டது. இன்னும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் சதீஷ் ஷெட்டி.
தனது தாயார் குறித்த தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு தருவதாகவும் சதீஷ் ஷெட்டி கூறியுள்ளார். இந்த மூதாட்டி குறித்த தகவல் உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் சதீஷ் ஷெட்டிக்குத் தகவல் தரலாமே.