ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர், தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள நாகரணையை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகம் (39).
இவர் சுண்டக்காபாளையம் ஊராட்சி தி.மு.க. தொண்டரணி இணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், நேற்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தெரிந்து கொள்வதற்காக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே டிவி மூலமாக தேர்தல் முடிவுகளை அவர் பார்த்து வந்தார்.
ஆனால், எதிர்பார்த்தபடி திமுக வெற்றி பெறாமல், அதிமுக வெற்றி பெற்றதால் சண்முகம் மனமுடைந்தார். வீட்டில் தனிமையில் இருந்த அவர், நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அக்பர்கான், சண்முத்தின் உடலை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்.
போலீசாரின் விசாரணையில் திமுகவின் தேர்தல் தோல்வியால் மனமுடைந்தே சண்முகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தற்கொலை செய்து கொண்ட சண்முகத்துக்கு, சரோஜினி என்ற மனைவி, பிரசாந்த் என்ற மகனும், தர்சினி என்ற மகளும் உள்ளனர்.