தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானதால், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் சன் டிவியின் பங்குகள் விலை உயர்ந்தன.
15-வது சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நேற்று தமிழகம் முழுவதும் 232 தொகுதிகளில் நடைபெற்றது.
இதில் திமுக-காங்கிரஸ் அணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்தது. இதையடுத்து இன்று பங்குச் சந்தையில் சன் டிவியின் பங்குகள் விலைகள் உயர்ந்தன.
இன்று வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையில் சன் டிவியின் பங்குகள் 10.75 சதவீதம் உயர்ந்து ரூ. 435.55க்கு விற்பனையானது. இதுபோல தேசிய சந்தையில் நிஃப்டியில் 10.39 சதவீதம் உயர்ந்து ரூ.435க்கு விற்பனையானது.
9 லட்சம் பங்குகள் சன் டிவியின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் 4.93 லட்சம் பங்குகள் கைமாறின. அதே போல தேசிய பங்குச் சந்தையில் 4.7 லட்சம் பங்குகள் கைமாறின.
சன் நெட்வொர்க்குக்கு சொந்தமானவர்கள் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன். இருவரும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன்கள். திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்கள்.