காப்பாற்ற யாரும் வரவில்லை.. பெண் உருக்கம் !

பெங்களூரில் இளம்பெண்ணை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனிடையே, 'என்னை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை' என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 23 ம் தேதி, பெங்களூரில் உள்ள கத்திரிகுப்பே மெயின் ரோட்டில் நடந்து வந்த ராகினி (பெயர் மாற்றம்) என்ற இளம் வயது பெண்ணை, 

 மர்ம நபர் ஒருவர் குண்டுகட்டாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த பெண் கூச்சலிட்டும், யாரும் உதவிக்கு வரவில்லை. 

இதனைத்தொடர்ந்து மர்மநபரை தனது பலத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்த இளம்பெண், கத்திரிகுப்பே நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்று 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இளம் பெண்ணை மர்மநபர் தூக்கிச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 

கத்திரிகுப்பே மெயின் ரோட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள அந்த காட்சியில், ஏப்ரல் 23ம் தேதி இரவு, தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்து ராகினி இறங்குகிறார். 

பின்னர் அவர் சாலையோரம் நின்று கொண்டிருக்கும் போது பின்னால் வரும் மர்ம நபர், அவரை குண்டுகட்டாக அங்கிருந்து தூக்கி செல்கிறார். ராகினியை மர்மநபர் தூக்கி செல்வதை அப்பகுதியில் வசிக்கும் சிலர் வேடிக்கை பார்க்கிறார்கள்.
மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் ராகினியை மர்மநபர் தூக்கி செல்வதை பார்த்துவிட்டு, அவரை காப்பாற்ற முயற்சி செய்யாமல் அங்கிருந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் இரவு 9.30 மணியில் இருந்து 10 மணிக்குள்தான் அரங்கேறி உள்ளது.

இது குறித்து பெங்களூரு காவல்துறை துணை ஆணையர் லோகேஷ்குமார் தெரிவிக்கையில், "இச்சம்பவம் தொடர்பாக ஒருவனை கைது செய்து உள்ளோம். அவனது பெயர் அக் ஷய். அவனே குற்றவாளி” என்று கூறியுள்ளார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், " என்னை மர்மநபர் கடத்தி சென்றபோது, அப்பகுதி வழியாக பொதுமக்கள் பலர் சென்றனர். ஆனால் என்னை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை" என்று வேதனையுடன் கூறினார்.
Tags:
Privacy and cookie settings