சகாயம் அறிக்கையை காப்பியடித்தாரா ஜெயலலிதா?

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள தேர்தல் இலவசங்களில் மிக முக்கியமானது கோ-ஆப்டெக்ஸின் 500 ரூபாய் இலவச கூப்பன். ' 
பொங்கல் திருநாளில் ஏழை எளிய மக்கள் துணிகள் வாங்கிக் கொள்வதற்காக அம்மா அறிவித்துள்ள மகத்தான திட்டம் இது' என ஊரெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள் அமைச்சர்கள். ' சகாயத்தின் அறிக்கையைத்தான் ஜெயலலிதா காப்பியடித்திருக்கிறார்' என்கின்றனர் கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள்.

மதுரையில் கிரானைட் விவகாரத்தைக் கிளறியதால், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக 2012 ஜூன் மாதம் பொறுப்பேற்றார் சகாயம். அவர் பதவிக்கு வருவதற்கு முன்புவரையில் அரசின் நலிவடைந்த துறைகளின் பட்டியலில் கோ-ஆப்டெக்ஸ் இருந்தது.

பதவியேற்ற ஓர் ஆண்டிலேயே 2 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தந்தார் சகாயம். கோ-ஆப்டெக்ஸ் விற்பனையும் 200 கோடியில் இருந்து, 300 கோடி ரூபாயாக உயர்ந்தது. 

நெசவாளர்களுக்கு ஊக்கத்தொகை, நெசவாளர்களின் பெயர்களை சேலையில் பொறிப்பது, தொடர் தேசிய விருதுகள் என கோ-ஆப்டெக்ஸின் பெயரை சர்வதேச அளவில் புகழ்பெற வைத்தார்.

அதேநேரத்தில், 'நெசவாளர்களின் வாழ்வு மேம்பட என்ன செய்ய வேண்டும்?' என்பது குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார் சகாயம். அதன் ஒரு பகுதிதான், ' 
பொங்கல் பண்டிகை நாட்களில் 500 ரூபாய் மதிப்புள்ள கூப்பன்களை மக்களுக்கு வழங்குவது. இதன் மூலம் அரசின் வருமானம் அரசுத் துறைக்கே வந்து சேரும்' என துறையின் செயலருக்கு அறிக்கை கொடுத்திருந்தார் சகாயம். 

'மிக அற்புதமான திட்டம். விரைவில் அமல்படுத்துவோம்' என துறையின் செயலர் உறுதியளித்திருந்தார். அப்போது திட்டம் செயல்படுத்தப்படவில்லை. '
இப்போது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து நல்ல பெயர் வாங்கிவிட்டார் துறையின் அமைச்சர் கோகுல இந்திரா' என்கின்றனர் கோ-ஆப்டெக்ஸ் வட்டாரத்தில்.

இதைப் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் கோ-ஆப்டெக்ஸ் உயர் அதிகாரி ஒருவர், " சகாயம் நிர்வாக இயக்குநராக இருந்த சமயத்தில், 'அரசின் இலவச, வேட்டி சேலைத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது?' என்பதைப் பற்றி விரிவான ஆய்வு ஒன்றை நடத்தினார். 

அதன்படி அரசின் கவனத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். அந்த அறிக்கையில், ' பொங்கல் பண்டிகளை நாட்களில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை மக்களுக்கு வழங்கப்படுகிறது. 

இதன்மூலம் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு திட்டம் சென்றடைகிறது. ஆனால், பத்து சதவீதம் பேர்கூட அந்த வேட்டி, சேலைகளைப் பயன்படுத்துவதில்லை. திட்டத்தின் நோக்கமும் நிறைவேறவில்லை. இதனால் எந்தப் பயனும் இல்லை. 

1984-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, ' ஏழை நெசவாளிகளின் துணிகள் தேங்கிப் போகிறது' எனக் கோரிக்கை வந்ததால், அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்காக இலவச வேட்டி, சேலை திட்டத்தைக் கொண்டு வந்தார். 

அந்தக் காலகட்டம் என்பது வேறு. இன்றைக்கு இந்த திட்டத்தால் ஏழை நெசவாளிகள் பயன்பெறுவதில்லை. இலவச வேட்டி, சேலை திட்டத்திற்குத் தயாராகும் துணிகள் முழுக்க விசைத்தறிக் கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

அரசு கொள்முதல் செய்யும் துணிகளில் 98 சதவீதம் விசைத்தறிக் கூடங்களில் இருந்துதான் வருகிறது. எந்த கைத்தறி நெசவாளிக்கும் இதன் பயன் சென்று சேருவதில்லை. 

சேலம், திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் வசதிபடைத்தவர்கள்தான் விசைத்தறிகளை நடத்துகின்றனர். பாரம்பரியான கைத்தறி நெசவு என்பது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. ' 
அதற்குப் பதிலாக எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என கோ-ஆப்டெக்ஸின் 500 ரூபாய் கூப்பனைக் கொடுக்கும்போது, மக்கள் அதிகம் திரள்வார்கள்.

கோ-ஆப்டெக்ஸ் துறைக்கு 500 கோடி ரூபாய் கிடைக்கும். அதன்மூலம் ஏழை நெசவாளிக்கும் உதவ முடியும். அரசின் பணம் அரசுத் துறைக்கே வந்து வரும்

எனவே, இலவச வேட்டி, சேலை திட்டத்தை ரத்து செய்யுங்கள்' என அறிக்கை கொடுத்தார் சகாயம். தனது அறிக்கையில், '500 ரூபாய் கூப்பன்' என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார் சகாயம். 

'உடனே இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் சகாயம் பெயர் முன்னால் வரும். எனவே கிடப்பில் போடுங்கள்' என உத்தரவிட்டார் அமைச்சர் கோகுல இந்திரா. 

இப்போது அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சகாயத்தின் பரிந்துரை இடம் பெற்றிருக்கிறது. சகாயத்தின் திட்டத்தை தன்னுடைய திட்டமாக மாற்றி நல்ல பெயர் வாங்கிவிட்டார் கோகுல இந்திரா" என ஆதங்கப்பட்டார் அவர்.

சகாயம் பெயரைச் சொன்னாலே வேப்பங்காயை சாப்பிட்டதுபோல துள்ளிக் குதித்த அ.தி.மு.க அரசுக்கு, அவரது அறிக்கை மட்டும் இனிக்கிறதே...!
Tags:
Privacy and cookie settings