கணவன் மீது சந்தேகித்து, அவரது கைபேசியை உளவுபார்த்த பெண்ணை நாட்டில் இருந்து வெளியேற்ற அஜ்மன் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அஜ்மனில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள அந்தப் பெண்ணின் கணவர் மற்றொரு பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
கணவரின் அத்துமீறல்களை கண்காணிக்க நினைத்த மனைவி, அவரது கைபேசிக்கு வந்த குறுந்தகவல்கள் மற்றும் அவரது புதிய காதலியின் புகைப்படங்களை தனது கைபேசிக்கு மாற்றம் செய்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக தனது கவனத்துக்கு வந்ததும், தன்னை உளவுபார்க்கும் மனைவிமீது அந்நபர் அஜ்மன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணையின்போது கணவரை உளவுபார்த்த தகவலை அந்தப் பெண் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு ஒன்றரை இலட்சம் திர்ஹம் அபராதம் விதித்த நீதிமன்றம், உடனடியாக அவரை நாடுகடத்தும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்த தம்பதியர் வெளிநாட்டில் இருந்து அஜ்மனுக்கு வந்து, இங்கு வேலைபார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.