மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினரயி விஜயன் முதல்வர் !

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பினரயி விஜயன் கேரள மாநில முதல்வர் ஆகிறார். கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். 
இதையடுத்து உம்மன் சாண்டி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினரயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பார்த்தாலே தீட்டு என்று ஒதுக்கப்பட்ட சமூகத்தில் கள் இறக்கும் குடும்பத்தில் 1944ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி கண்ணூரில் பிறந்தவர் பினரயி விஜயன். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து படிப்படியாக வளர்ந்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஆனார். 

அவசரநிலைக் காலத்தின்போது கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயன் அரசால் கைது செய்யப்பட்டு முதுகுத் தோல் உரிய தாக்கப்பட்டார்.

1964 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின் முன்னோடியான கேரள மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருந்தார். 1970 ஆம் ஆண்டில் 26 வயதில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றார். 

அவசரநிலைக் காலத்தில் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு மின்சாரத்துறை அமைச்சரானார். 1998 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வானார். 

இப்போது, கேரள முதல்வராக பதவியேற்கவுள்ளார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து தன்னுடைய பல்வேறுகட்ட போராட்டங்கள் மூலம் இன்று உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings