மதுபான விற்பனையை தடை செய்துள்ள பீகார் தற்போது, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கும் தடை விதித்து அசத்தியுள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மீண்டும் பீகாரில் பதவிக்கு வந்ததும், மது விலக்கை மாநிலத்தில் அமல்படுத்தினார். மது விற்பனை, மது அருந்துதல், மதுவை சேமித்து வைத்தல் போன்ற அனைத்துவகை செயல்பாடுகளுக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை தயாரிக்க, சாப்பிட, வைத்திருக்க என அனைத்துவகை நடவடிக்கைகளுக்கும் பீகார் அரசு தடை விதித்துள்ளது.
இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பின்தங்கிய மாநிலமாக இருந்த பீகாரை சமூக ரீதியாக முன்நகர்த்தும், நிதிஷ்குமார் அரசின் மற்றொரு முயற்சியாக சமூக ஆர்வலர்கள் இதை பார்க்கிறார்கள்.
நிதீஷ்குமாரை போலவே மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள ஜெயலலிதாவும், தமிழகத்தில் இதுபோன்ற மக்களை பாதிக்கும் விஷயங்களுக்கு கட்டுப்பாட்டை கொண்டு வருவாரா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.