ராதாபுரம் தொகுதியில் எண்ணப்படாத 300 தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்
அத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட அப்பாவு. தமிழக சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவுக்கு 69,541 வாக்குகள் கிடைத்தது. இதனால், திமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, அப்பகுதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த வாக்குகளையும் எண்ண வேண்டும் என வலியுறுத்தி அப்பாவு வாக்கு எண்ணிக்கையின் போது, அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவே, அப்பாவுவை துணை ராணுவப்படையினர் குண்டு கட்டாக அங்கிருந்து வெளியேற்றினர். இதனையடுத்து, வெளியேறிய திமுக அப்பாவு வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி போராட்டம் நடத்திய அப்பாவு, திமுக வாக்குகள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டதாக புகார் கூறினார். தான் வெற்றி பெற்று விட்டதாகவும்,
தன்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அப்பாவுவின் இந்தப் புகார் குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் லக்கானியிடம் திமுக பொருளாளர் ஸ்டாலின் மனு அளித்தார்.
இந்நிலையில், எண்ணப்படாத 300 தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், அப்பாவு இன்று மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, "ராதாபுரம் தொகுதியில் எண்ணப்படாத 300 தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்று மனு அளித்துள்ளேன். வாக்கு எண்ணும் மைய கேமரா பதிவுகளுடன் வழக்கு தொடரப்போகிறேன்" என்றார்.