முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதியின் தோல்வி, சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், வளர்மதி உட்பட பலருக்கு ஏற்கனவே அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை அதிமுக ஆட்சியில் முக்கிய பெண் அமைச்சராக வலம் வந்தவர் வளர்மதி. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி மூலம் சட்டசபைக்குள் நுழைந்த அவர்,
அடிக்கடி மீடியாக்களில் அடிபட்டு முக்கியமானவராக வலம் வந்தார். அவரது கோப முகம், அழுகை, சிரிப்பு என விதவிதமான புகைப்படங்களில் ஊடகங்களில் வெளியாகின.
இதனால் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்த வளர்மதிக்கு அவரது சொந்தத் தொகுதிக்குள் செல்வாக்கு சரிந்து வந்துள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் வளர்மதி.
ஆனால், தலைமை ஆயிரம் விளக்கு தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என வளர்மதிக்கு கட்டளை இட்டுவிட, தன் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்தே களத்தில் இறங்கியுள்ளார் வளர்மதி.
ஆனபோதும், குழந்தையை குளிப்பாட்டுவது உள்ளிட்ட வித்தியாசமான புகைப்படங்களால் அவரது பிரச்சாரம் ஊடகங்களில் மட்டுமல்லாது, சமூகவலைதளங்களிலும் பேசப்பட்டது.
ஆனால், திமுக சார்பில் வளர்மதிக்கு எதிராக கு.க.செல்வம் களமிறக்கப்பட்டார். அமைச்சராக இருந்தும் தனது தொகுதியில் கட்சியினருக்கு வளர்மதி எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட செல்வம், தொகுதிக்குள் வளர்மதி மீதான அதிமுக தொண்டர்களின் அதிருப்தியை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்.
அதோடு தேர்தல் சமயத்தில் வாக்காளர்களை உரிய விதத்தில் கவனிக்கவும் வளர்மதி தவறி விட்டார் எனக் கூறப்படுகிறது.
எப்படியும் தோற்று விடுவோம் என்ற அவநம்பிக்கையில் இருந்ததால், ஜெயிக்க வைத்தால் கவனிக்கிறேன் என தொகுதி மக்களுக்கு டோக்கன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுவும் வளர்மதிக்கு எதிரான அதிருப்தியாக மாறியது. இவ்வாறு அடுக்கடுக்கான அதிருப்திகளின் பலனாக, மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் வெற்றியைப் பறி கொடுத்துள்ளார் வளர்மதி.