சென்னையில் அடுத்தடுத்து விஷ ஊசி மூலம் கொல்லப்பட்ட நபர்களின் மரணம் குறித்து போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், விசாரணையின் முடிவில் சென்னை ஈஞ்சம் பாக்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் பிடிபட்டுள்ளார்.
உத்திரமேரூரைச் சேர்ந்த ஶ்ரீதரை கடந்த ஆண்டு மே-மாதத்திலும், அக்டோபர் மாதத்தில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஹென்றியையும் விஷ ஊசி மூலம் கொன்ற ஸ்டீபன்,
இதற்கு முன்னால், தன்னுடைய சொந்த மைத்துனர் ஜான் பிலோமினனை கடந்த ஆண்டு ஏப்ரலிலும் விஷ ஊசி போட்டுக் கொன்றுள்ளார்.
இந்தக் கொலைவழக்கில் ஸ்டீபன் பிடிபடுவதற்கு காரணமாக இருந்தது, அவர் வீட்டில் கொள்ளை போனதாக கடந்த 4.4.2016 அன்று அவரே கொடுத்திருந்த புகார்தான்.
“என் வீட்டில் இருந்து 40 பவுன் நகைகளை யாரோ கொள்ளையடித்துச் சென்று விட்டனர்” என்று புகாரில் ஸ்டீபன் சொல்லியிருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பாலாஜி, முருகானந்தம், சதீஷ்குமார் ஆகியோர் சிக்கினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட அடுத்தகட்ட விசாரணையில்தான் ஸ்டீபன் ஒரு சீரியல் கில்லர் என்ற தகவல் தெரிய வந்திருக்கிறது. ‘எப்படி ட்ரேஸ் செய்தீர்கள்?’ என்று விசாரணை அதிகாரியான உதவி போலீஸ் கமிஷனர் பாண்டியனிடம் கேட்டேன்.
“ஸ்டீபன் கொடுத்த புகாரில் மூன்று பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டோம். நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டதோடு, ஸ்டீபன் சொல்லி அடுத்தடுத்து முன்று பேரை விஷ ஊசி போட்டுக் கொன்றதாக வாக்கு மூலத்தில் சொல்லி விட்டனர்
மனைவியைப் பிரியக் காரணமாக இருந்த மைத்துனர் ஜான்பிலோமின், ஹென்றியின் மனைவியோடு இருந்த கள்ளக் காதலுக்காக ஹென்றி, ஶ்ரீதரின் மனைவியோடு இருந்த கள்ளக் காதலுக்காக ஶ்ரீதர் என்று மிகவும் சாதாரணமாக ஸ்டீபன் சொல்லி விஷ ஊசியை பயன்படுத்தி கொலை செய்துள்ளனர்.
ஶ்ரீதர் வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள், விஷ ஊசிகள், சிரிஞ்சுகள் கைப்பற்றப் பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்றார் பாண்டியன்.
சென்னை அண்ணா சாலையில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென மயக்கம் வந்தவர் போல் தடுமாறி, வண்டியை ஒரு தடுப்பில் மோதி நிறுத்திய ஜான் பிலோமினை,
108 ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜான் பிலோமினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
அந்த ஜான் பிலோமின்தான் விஷ ஊசி மூலம் கொல்லப்பட்டதாக ஸ்டீபன் வீட்டில் கொள்ளையடித்து பிடிபட்டவர்கள் இப்போது, போலீஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைகள் அனைத்தையும் ஸ்டீபன் கூலிப்படை மூலம்தான் செய்துள்ளார், எந்த இடத்திலும் அவர், நேரில் சென்றதில்லை என்கிறது காவல் வட்டாரம்.
மோட்டார் சைக்கிளில் சென்ற ஜான் பிலோமினனை பக்கத்தில் உரசுவது போல் சென்ற கொலையாளிகள், கையில் இருந்த குடைக் கம்பியின் கைப்பிடி முனையில் பொருத்தியிருந்த விஷ ஊசி மருந்தை,
வண்டி போய்க் கொண்டிருக்கும்போதே ஜான் பிலோமினனின் இடுப்பில் குடைக் கம்பியால் இயல்பாக குத்துவது போல குத்திக் கதையை முடித்துள்ளனர்…
இன்னும் இதுபோல் எத்தனை உயிர்களை இவர்கள் வலிக்காமல் ஊசி போட்டு நிறுத்தியுள்ளனரோ என்று நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.
சென்னையில் இந்த முறையில் கொலைகளை செய்து முடிக்கும் டீம் வேறு ஏதும் இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமைதான்.
சாதாரணமாக சாலையில் போனார்… வெயிலில் சுருண்டு விழுந்தார், மயங்கினார், செத்தார் என்று முடிகின்ற வழக்குகளையும் இனி தீவிரமாக விசாரிக்க வேண்டும். ---- ந.பா.சேதுராமன்