தமிழகத்தின் முதல்வராக 6-வது முறையாக பதவி ஏற்ற நாளிலேயே, கட் அவுட்டுகள் இல்லை.. காலில் விழும் கலாசாரம் இல்லை.... ஆகா நல்ல மாற்றமாக இருக்கிறதே என பேச வைத்தவர் ஜெயலலிதா...
இதோ தற்போது பரம எதிரியான திமுகவுக்கும் அதன் பொருளாளர் ஸ்டாலினுக்கும் வாழ்த்து, நன்றி எல்லாம் சொல்லி தமிழகத்திலும் ஆரோக்கிய அரசியலுக்கு விதை போட்டிருக்கிறார் ஜெயலலிதா.
திமுகவினரை கண்டாலே ஏறெடுத்தும் பார்க்க தயங்குவர் அதிமுகவினர்... எங்கே "அம்மா" நம் மீது நடவடிக்கை எடுத்துவிடுவாரோ? என்ற அச்சம்தான் காரணம்....
தமிழகத்தில் பிற கட்சித் தலைவர்கள் சகஜமாக சந்தித்து கொண்டாலும் ஜெயலலிதா மட்டும் விதிவிலக்காக இருந்து வந்தார். ஒரே ஒருமுறை தலைமை செயலகத்தில் ஜெயலலிதாவை ஸ்டாலின் நேரில் சந்தித்தும் பேசியிருந்தார். அதுதான் சரித்திரமாக இருக்கிறது.
தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஜெயலலிதாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் அடடே! என ஆச்சரியப்பட வைக்கிறது... தாம் பதவி ஏற்ற நிலையில் கட் அவுட்டுகளுக்கு கெட் அவுட் சொல்லி அசத்தியிருந்தார் ஜெயலலிதா.
அதேபோல் பதவி ஏற்ற அமைச்சர்கள் காலில் விழக் கூடாது என தடை உத்தரவு போட்டிருந்தார்.... இந்த தடையை மீறி விசுவாசம் காட்டிய செல்லூர் ராஜூவுக்கு பரிசாக ஜெ.வின் 'கோப பார்வை'தான் கிடைத்தது.
இத்தனைக்கும் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அரசு அதிகாரிகள் பலரும் நெடுஞ்சான்கிடையாக ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கினர். இது கடும் சர்ச்சையையும் கிளப்பி இருந்தது.
தற்போது பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கிய விவகாரம் குறித்து விளக்கம் அளித்து, ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் நன்றியும் வாழ்த்து
தெரிவித்து புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறார் ஜெயலலிதா. ஜெ. பதவி ஏற்பு விழா முடிந்த கையோடு கருணாநிதியிடம் இருந்து காட்டமான ஒரு அறிக்கை வந்தது.
அதில் ஸ்டாலினுக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ஜெயலலிதா திருந்தவும் இல்லை... திருந்தப் போவதும் இல்லை என கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார் கருணாநிதி.
ஆனாலும் ஸ்டாலினோ கூலாக, பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கருணாநிதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ஸ்டாலின் பங்கேற்பது தெரிந்து இருந்தால் முன்வரிசையில் உட்காருவதற்கு இடம் ஒதுக்கியிருப்போம்; திமுகவையோ ஸ்டாலினையோ அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் மாநில மேம்பாட்டுக்காக ஸ்டாலின்,
திமுக செயல்பட வாழ்த்துகிறேன் என்றும் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். ஆம் முதல்வர் ஜெயலலிதாதான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் தொடருமேயேனால் தமிழக சட்டசபை அமளிக்காடாகாது; வெளிநடப்பு கூடமாகவும் இருக்காது; தமிழகத்திலும் ஆரோக்கியமான அரசியல் தலையெடுக்க தொடங்கும்!